ஜாக்கிசானின் கடைசி ஆக்ஷன் படம் ‘CZ 12’

     உலகம் முழுவதும் பல கோடி ரசிகர்களைக் கொண்டவர் ஜாக்கி சான். இவரது அதிரடி ஆக்ஷன் மற்றும் காமெடி கலந்த நடிப்பு மூலம் ஆறிலிருந்து அறுபது வரை உள்ளவர்களை தன் பக்கம் இழுத்து வைத்துள்ளார்.

100 படங்கள் வரை ஆக்ஷன் ஹீரோவாக நடித்து வந்தவரின் முடிவில் திடீர் மாற்றம். 101வது படமாக உருவாகி உள்ள ‘CZ 12’ (Chinese Zodiac 12)  என்ற படத்தோடு தனது ஆக்ஷன் அவதாரத்தை முடித்துக் கொள்ள இருப்பதாக அவரே அறிவித்து உள்ளார்.

 ‘CZ 12’ படம்தான் ஜாக்கி சானின் கடைசி ஆக்ஷன் படம். இனி இவரை ஆக்ஷன் படங்களில் பார்க்க வாய்ப்பு இல்லை. அதனால்தானோ  ‘CZ 12’என்னவோ சூப்பரான ஆக்ஷன் படமாக உருவாகி உள்ளது.

ஜாக்கி சான் நடித்த 44 படங்களைத் தொடர்ந்து 45வது படமாக  இப்படத்தை இன்டோ ஓவர்சீஸ் பிலிம்ஸ் – பெரோஸ் இலியாஸ் – இந்தியா முழுவதும் வெளியிட , தமிழகம் முழுவதும் ஆர்ட் ஸ்டுடியோ பட நிறுவனம் சார்பாக ஜி.ஆர்.ஆர். ரகு, செந்தில், மகேஷ் மூவரும் வெளியிடுகிறார்கள்.

ஜாக்கிசான்   ‘CZ 12’ படத்தை நடித்து இயக்கி இருக்கிறார். வழக்கமான ஜாக்கியின் படங்களில் முக்கிய வேடங்களில் சீன நடிகர்கள்தான் இருப்பார்கள். ஆனால் இந்தப் படத்தில் ஜாக்கி சானைத் தவிர மற்ற நடிகர்கள் அனைவரும் ஹாலிவுட் படங்களில் நடிப்பவர்கள் என்பது இப்படத்தின் இன்னொரு சிறப்பம்சம்.

நமது ஜோசியப்படி 12 ராசிகள் உள்ளது போல சீனர்களின் 12 ராசியை ‘CZ 12’ என்று சொல்வார்கள். இரண்டாவது ஓவியம் போர் நடைபெற்ற போது சீன அரண்மனை ஒன்றிலிருந்து திருடப்பட்ட 12 ராசிகளுக்குரிய மிருகங்களின் வெண்கல தலை  சிலைகளை எப்படி மீட்கிறார் என்பதுதான் படத்தின் கதை.

இப்படத்தை இன்னொரு  ‘ஆர்மர் ஆப் காட்’ என்றும் சொல்லலாம். படத்தின் இரண்டாம் பாகம் இது.  லாட்வியா, பிரான்ஸ், சீனா, தைவான் போன்ற நாடுகளில் இப்படத்தை படமாக்கியிருக்கிறார்கள்.

ஒரு முக்கியமான சண்டை காட்சிக்கு மட்டும் 10 மில்லியன் யுஎஸ் டாலருக்கு மேல் செலவு செய்திருக்கிறார்கள். படத்தில் இடம் பெற்றுள்ள கடைசி 4 நிமிட காட்சியை மட்டும் படமாக்க 2 மாதங்கள் ஆகியுள்ளது. படத்தின் முதல் காட்சியிலிருந்து கடைசி காட்சி வரை ஜாக்கி சான் இந்த படத்தில் சண்டையிட்டுக் கொண்டேயிருப்பார்.

ஜாக்கிசான் தவிர, ஆலிவர் பிளாட், லாரா வீஸ்பெக்கர், குவான் சாங் வூமற்றும் பலர் நடித்திருக்கிறார்கள்.

‘CZ 12’ டிசம்பர் 20ம் தேதியன்று இந்தியாவில் ஆங்கிலம், ஹிந்தி, தமிழ், தெலுங்கு ஆகிய மொழிகளில் வெளியாகிறது.

Read Previous

அனைவரும் விரும்பும் ‘அனுஷ்கா’

Read Next

CZ 12 – கேலரி

Most Popular