‘சமர்’ படம் வெற்றி பெற்றதைத் தொடர்ந்து இயக்குனர் திரு, விஷால், த்ரிஷா ஆகியோர் பத்திரிகையாளர்களைச் சந்தித்து நன்றி கூறினர்.
விஷால் பேசுகையில், “ முதல் நன்றி ரசிகர்களுக்குத்தான், ஆனாலும் அவர்களிடம் படத்தை சரியாக கொண்டு சேர்க்கும் பத்திரிகையாளர்களும் எங்களது நன்றிக்குரியவர்கள்,” என்றார்.
த்ரிஷா சிம்பிளாக அனைவருக்கும் நன்றி என ஓரிரு வார்த்தைகள் தங்கிலீஷில் பேசி விட்டு உட்கார்ந்து விட்டார்.
விடுவார்களா, நம் பத்திரிகையாளர்கள் , வழக்கமான ‘ விஷால் – த்ரிஷா’ இருவருக்குமான கெமிஸ்ட்ரியில் இருந்து கேட்கப்பட்ட கேள்விகள் போகப் போக சூடாக ஆரம்பித்தன.
‘சமர்’ வெளியீட்டை சிலர் தடுக்க முயன்றதைப் பற்றிய கேள்விகளாவே எழுந்தன. விஷாலும் அவற்றிற்கு சளைக்காமல் பதில் சொன்னார். ஆனால் கடைசி வரை பட வெளியீட்டிற்கு அவர்களுக்கு ‘வில்லனாக’ இருந்தது யார் என்பதை மட்டும் சொல்லவில்லை. யார் அந்த ‘ராஜா’வோ தெரியலை…‘சூரியனுக்கே’ வெளிச்சம்…
“எந்த நேரத்துல இயக்குனர் திரு இந்த படத்துக்கு ‘சமர்’னு பேர் வச்சாரோ அன்னிக்கு இருந்து படம் வர்ற வரைக்கும் ஒரே போராட்டம்தான்,” என்ற விஷால் அடுத்து திரு இயக்கத்தில் நடிக்கப் போவதாகவும் சொன்னார்.
பொதுவாக தான் நடித்த பட விழாக்களில் அதிகம் கலந்து கொள்ளாத த்ரிஷாவின் வருகை ஆச்சரியமாக இருந்தாலும், அவர் பேசியது அதிர்ச்சியாக இருந்தது.
சமர் படத்தில் ஒரு காட்சியில் த்ரிஷா ‘தண்ணி’ அடிப்பது போன்ற காட்சியைப் பற்றி ஒருவர் கேட்க, அதற்கு பதிலளித்த த்ரிஷா, “நான்தான் அப்படி ஒரு காட்சியை வைக்க சொன்னன், இதை மாதிரி காட்சி என் படத்துல வந்தால் அந்த படம் கண்டிப்பா ஹிட் ஆகிடும்”, என்றார்.
உடனே, பதில் கேள்வி எழுப்பிய நிருபர், ‘அப்ப அடுத்த படங்கள்லலாம் இப்படி காட்சி இருக்கா என்று கேட்க, பதிலுக்கு த்ரிஷாவும், “அதைப் பத்தியெல்லாம் இனிமேல்தான் டைரக்டர் கிட்ட பேசணும்,“ என்றார்.
அப்ப, இனி படத்துலலாம், கதை வேணாம், பாட்டு வேணாம், த்ரிஷா தண்ணியடிக்கிற மாதிரி ஒரு காட்சி வைங்க டைரக்டர்ஸ் உங்க படம் கண்டிப்பா ஹிட்…