விஸ்வரூபம் திரைப்பட வெளியீடு தொடர்பாக எழுந்துள்ள பிரச்சனையில் இன்று தமிழக அரசு, இஸ்லாமிய இயக்கங்களின் கூட்டமைப்பு, கமல்ஹாசன் தரப்பு என முத்தரப்பு பேச்சு வார்த்தை நடைபெறும் எனத் தெரிகிறது.
இஸ்லாமிய இயக்கங்களின் கூட்டமைப்புடன் பேச்சு வார்த்தை நடத்தி தீர்வு காணும்படி முதல்வர் தெரிவித்ததையடுத்து அடுத்தடுத்த நடவடிக்கைகள் ஆரம்பமாகியுள்ளன .
கடந்த இரண்டு நாட்களாக அறிக்கை, பேட்டிகள் , ஆகியவற்றின் காரணமாக ஏற்பட்ட சூடான சூழல், முதல்வரின் தலையீடு காரணமாக சுமூகமான சூழலை உருவாக்கும் விதமாக அமைந்தது.
ராதிகா சரத்குமார், சிவகுமார் போன்ற சீனியர் நடிகர்கள், பெப்சி தலைவராக இருக்கும் அமீர் ஆகியோர், கமல்ஹாசன் தரப்புக்கு ஆதரவு அளித்து பேச்சுவார்த்தையை முன்னெடுத்துச் செல்லும் பணியில் ஈடுபடுத்திக் கொண்டனர்.
கமல்ஹாசன் தரப்பிலிருந்தும் பேச்சு வார்த்தைக்கு தயாராக இருப்பதாக கடிதம் கொடுக்கப்பட்டது. இஸ்லாமிய இயக்கங்களின் கூட்டமைப்பும் தமிழக அரசு அதிகாரிகளும் பங்கேற்க வேண்டும் ,முத்தரப்பும் இணைந்து பேச்சு நடத்த வேண்டும் என்று சொன்னார்கள்.
இதையடுத்து தமிழக அரசு அழைப்பின் பேரில் முத்தரப்பும் இணைந்து இன்று பேச்சு நடத்த வாய்ப்பு உள்ளதாகத் தெரிகிறது.