தமிழ்த் திரையுலகின் சகல கலா வல்லவர் டி.ஆர். என்றால் அது மிகையில்லை. 80, 90களில் ரஜினிகாந்த் படங்களுக்கு இணையாக அவருடைய படங்கள் வசூலை அள்ளிக் குவித்தன.
அவருக்கென்று தனி ரசிகர் கூட்டம் உண்டு. அதிலும் பெண் ரசிகைகள் அதிகம் பெற்றவர்களில் இவரும் ஒருவர். அப்போதெல்லாம் டி.ஆர், பாக்யராஜ் படங்கள் என்றாலே தியேட்டர்களுக்கு தாய்மார்களின் கூட்டம் அதிகமாக வரும்.
டி.ஆர். என்றாலே உடனே ஞாபகத்திற்கு வருவது அவருடைய ‘தாடி’ தான். அப்போது நடிகையாக இருந்த உஷாவை அவர் காதலித்து மணம் புரிந்தாலும் தாடியை மட்டும் இன்று வரை எடுக்கவேயில்லை.
அப்படி அந்த தாடிக்குள் என்னதான் ‘ரகசிசயம்’ மறைந்திருக்கிறது என்பதற்கு சமீபத்திய பேட்டி ஒன்றில் விளக்கமளித்துள்ளார் டி.ஆர்.
சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் எம்.ஏ. படிப்பதற்காக மாயவரத்திலிருந்து தினமும் 6 மணிக்கு கிளம்பி ரயில் ஏறிச் சென்று படித்து வந்த காலத்தில் நடந்த விஷயத்தை சொல்கிறார்.
“நான் கல்லூரியில் படித்த காலத்தில் என் வீட்டில் மின்சார வசதி கிடையாது. விடியற்காலையில் சிம்னி விளக்கை வைத்து தாடியை ஷேவ் செய்வேன். இரண்டு வாரத்திற்கு ஒரு பிளேடு மாற்றுவேன். துருப்பிடித்துவிடும்.
பாதி இருட்டில் ஷேவ் செய்யும் போது முகத்தை பிளேடு பதம் பார்த்து ரத்தம் சொட்டும. கத்தி சத்தம் போடுவேன்.
அப்போது என் பாட்டி என் அருகில் வந்து ‘இந்த மூஞ்சிக்கு ஷேவிங் ஒரு கேடா…இந்த மூஞ்சிய எவ பார்க்கப் போறாள்..போடா போ…உன்னோட அறிவுக்கு முகம் முக்கியமில்லை..அகம்தான் முக்கியம். அது உனக்கு அழகா இருக்கு. போடா போ…’ன்னு சொன்னாங்க.
அப்போதிலிருந்து ஷேவ் செய்வதை நிறுத்தி தாடி வளர்க்க ஆரம்பிச்சேன். இதுதான் என் தாடிக்குப் பின்னாடி உள்ள கதை,” என்கிறார் டி.ஆர்.
‘வசதி’ இல்லாத காலத்துல வச்ச தாடியே இன்னைக்கு அவருக்கு சினிமா மூலமா நல்ல ‘வசதி’யை ஏற்படுத்திக் கொடுத்திடுச்சி….