ஐபிஎல் சூதாட்ட புகார் – சென்னையில் 6 பேர் கைது

ipl-2013லக அளவில் பிரபலமடைந்துள்ள ஐபிஎல் கிரிக்கெட் விளையாட்டுப் போட்டியில் சூதாட்டத்தில் ஈடுபட்டதாக ராஜஸ்தான் ராயல்ஸ் அணி வீரர்களான ஸ்ரீசாந்த், சாண்டிலா, அங்கித் சவான், ஆகியோர் கைது செய்யப்பட்டு அவர்களிடம் விசாரணை நடைபெற்று வருகிறது.

கிரிக்கெட் ரசிகர்களிடம் பேரதிர்ச்சியை இந்த சம்பவம் ஏற்படுத்தியுள்ளது.

இந்த நிலையில், கிரிக்கெட் சூதாட்டம் தொடர்பாக சென்னையில் 13 இடங்களில் போலீசார் அதிரடி சோதனை நடத்தினார்கள். சி.பி.சி.ஐ.டி. போலீஸ் டி.ஜி.பி. நரேந்திர பால்சிங் உத்தரவின்பேரில், ஐ.ஜி. மஞ்சுநாதா, சூப்பிரண்டு பெருமாள் தலைமையில், துணை போலீஸ் சூப்பிரண்டுகள் ராஜா சீனிவாஸ், ஜெயச்சந்திரன், அரவிந்தன், இன்ஸ்பெக்டர்கள் செல்வகுமார், செந்தில்குமார், பரணி, உமா, சுமதி ஆகியோர் அடங்கிய 13 தனிப்படையினர் சூதாட்டக்காரர்களை வேட்டையாடி பிடித்தனர்.

இது குறித்து ஐ.ஜி. – மஞ்சுநாதா கூறியதாவது,

நாங்கள் சேகரித்த தகவல்களில், டெல்லியை தலைமையிடமாகக் கொண்டு மும்பை, சென்னை ஆகிய நகரங்களில் கிரிக்கெட் சூதாட்டக்காரர்கள் கோடிக்கணக்கில் பணத்தை கட்டி சூதாட்டத்தில் ஈடுபடுகிறார்கள் என்பது தெரிய வந்தது. இவர்கள் நாடு முழுவதும் பெரிய அளவில் நவீன வசதிகளுடன் ‘நெட்வொர்க்’ அமைத்து பல்வேறு குழுக்களாக பிரிந்து செயல்படுவது தெரிய வந்தது. சென்னையில் மட்டும் 20 குழுக்கள் கொண்ட தரகர்கள் செயல்படுவதை கண்டறிந்தோம்.

இந்த குழுக்களின் தலைவனாக சென்னை சூளைமேட்டை சேர்ந்த ஹரீஸ் பஜாஜ் செயல்படுவது தெரியவந்தது. இவர் பிரபல தொழில் அதிபர் ஆவார். சூளைமேட்டில் உள்ள இவரது வீட்டில் சோதனை நடத்தினோம். அடுத்து இவரது கூட்டாளிகளான ராஜா அண்ணாமலைபுரத்தை சேர்ந்த வேதாச்சலம், புரசைவாக்கத்தை சேர்ந்த லக்கி என்ற நர்பத், சவுகார்பேட்டையை சேர்ந்த பிரவீன் குமார் என்ற பப்புகவுதம், கீழ்ப்பாக்கத்தை சேர்ந்த தீபக் பஜாஜ், சுனில் பஜன்லால் ஆகிய 6 தரகர்கள் கைது செய்யப்பட்டனர். இவர்கள் வீடுகளிலும் சோதனை நடத்தப்பட்டது. அடுத்தபடியாக சைதாப்பேட்டை, திருவல்லிக்கேணி, ராயப்பேட்டை, அண்ணாநகர், காலடிபேட்டை ஆகிய இடங்களிலும் சோதனை மேற்கொள்ளப்பட்டது.

இந்த சோதனையில் சுமார் ரூ.15 லட்சம் ரொக்கப்பணம் பறிமுதல் செய்யப்பட்டது. 10 லேப்–டாப்கள், 4 கம்ப்யூட்டர் சாதனங்கள், 5 வயர்லஸ் போன்கள், 24 செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டன. தொடர்ந்து விசாரணை நடக்கிறது. கைதானவர்களில் ஹரீஸ் பஜாஜும், தீபக் பஜாஜும் உறவினர்கள். கைதான வேதாச்சலம் தனியார் கம்பெனி ஒன்றில் அதிகாரியாக பணியாற்றி ஓய்வு பெற்றவர். இவர்கள் 20 ஓவர் போட்டிகளிலும், ஒரு நாள் போட்டிகளிலும் சூதாட்டம் நடத்துபவர்கள் என்று விசாரணையில் தெரிய வந்துள்ளது. இவ்வாறு ஐ.ஜி. மஞ்சு நாதா தெரிவித்தார்.

கைதான சூதாட்ட தரகர்கள் ஒவ்வொருவரும் தங்களிடம் பணம் கட்டும் வாடிக்கையாளர்கள் பட்டியலை வைத்து இருந்தனர். போன் மூலம் வாய்மொழியாகவே சூதாட்டம் நடந்துள்ளது. சில வாடிக்கையாளர்கள் 5 முதல் 6 லட்சம் ரூபாய் வரை கூட பணம் கட்டி இருக்கிறார்கள். சில நேரங்களில் ஒரு பந்து வீச்சுக்கு கூட சூதாட்டம் நடந்துள்ளது. பண பரிமாற்றம் ‘கூரியர்’ சேவை மூலம் நடைபெற்றுள்ளதாகவும் விசாரணையில் தெரிய வந்துள்ளது. சென்னையில் நடந்த போட்டிகளில் மட்டுமின்றி, பல்வேறு இடங்களில் நடைபெற்ற போட்டிகளிலும் சென்னையில் இருந்து சூதாட்டம் நடந்துள்ளது. இது குறித்து சென்னையில் இருந்து டெல்லி, ஆமதாபாத், மும்பை, ஐதராபாத் ஆகிய நகரங்களுடன் நடைபெற்ற டெலிபோன் உரையாடல் பதிவு செய்யப்பட்டு உள்ளது.

தப்பியோடிய மேலும் சிலரை போலீசார் தேடி வருகிறார்கள்.

Read Previous

நேரம் – விமர்சனம்

Read Next

இரட்டிப்பு மகிழ்ச்சியில் ஷாம்…

Most Popular