தனுஷ் நடித்து 2003ம் ஆண்டில் வெளிவந்த சூப்பர் ஹிட் படமான ‘திருடா திருடி’ படம் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் சுப்ரமணியம் சிவா.
அந்தப் படத்திற்குப் பிறகு ‘பொறி, யோகி, சீடன்’ ஆகிய படங்களை இயக்கினார். ‘வட சென்னை, அசுரன்’ ஆகிய படங்களிலும் நடித்துள்ளார்.
சுப்ரமணியம் சிவா அடுத்து இயக்கி வரும் படம் ‘வெள்ளை யானை’. சமுத்திரக்கனி, ஆத்மியா, யோகி பாபு மற்றும் பலர் நடிக்கும் படம் இது. விவசாயத்தைப் பற்றியும், விவசாயிகளின் வாழ்க்கையைப் பற்றிய படமாகவும் இப்படம் உருவாகி வருகிறது.
இப்படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைப்பாளராக ஒப்பந்தமாகி அவருடைய இசைப் பணியை ஆரம்பித்துள்ளார்.
அது பற்றி சந்தோஷ் நாராயணன் கூறுகையில், “படம் தனக்கு மிகவும் பிடித்திருப்பதாகவும் , இன்றைய விவசாயிகளின் வாழ்க்கையின் மிக முக்கியமான வரலாற்றுப் பதிவு இந்தப் படம். நம் தாய் மண்ணின் இசையோடு இந்தப் படத்திற்கு இசையமைக்க மகிழ்ச்சியாக இருக்கிறது,” என்று கூறியுள்ளார் .
ஒயிட் லாம்ப் டாக்கீஸ் சார்பில் வினோத் குமார் இப்படத்தைத் தயாரிக்கிறார்.
படத்தின் இறுதிக் கட்டப் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. அவை முடிந்ததும் படத்தின் வெளியீட்டுத் தேதி விரைவில் அறிவிக்கப்படும்.