‘மிஸ்டர் சந்திரமௌலி’, அப்பாவைப் பார்த்து வியந்த மகன்

கிரியேட்டிவ் மீடியா எண்டர்டெயினர்ஸ் உடன் இணைந்து பாஃப்டா மீடியா வொர்க்ஸ் சார்பில் தனஞ்செயன் தயாரிப்பில் திரு இயக்கியிருக்கும் படம் ‘மிஸ்டர் சந்திரமௌலி’.

கார்த்திக் மற்றும் கௌதம் கார்த்திக் இருவரும் முதன் முறையாக இணைந்து நடித்திருக்கிறார்கள். இவர்களுடன் ரெஜினா கஸாண்ட்ரா, வரலட்சுமி சரத்குமார், சதீஷ், மகேந்திரன், அகத்தியன் ஆகியோரும் நடித்திருக்கிறார்கள்.

சாம் சிஎஸ் இந்தப் படத்திற்கு இசையமைத்துள்ளார். இப்படத்திற்காக குவிஸ் மொபைல் ஆப் வெளியீட்டு விழா மற்றும் பத்திரிகையாளர் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது.

அப்போது பேசிய படத்தின் இயக்குனர் திரு,

“மிஸ்டர் சந்திரமௌலி’ படம் எனக்கு எனக்கு நல்ல அனுபவமாக இருந்தது. அதற்கு தயாரிப்பாளர், படத்தில் உழைத்த அத்தனை கலைஞர்களும் முக்கிய காரணம்.

அப்பா, மகன் பற்றி நிறைய நல்ல படங்கள் வந்திருக்கின்றன. இந்தப் படம் வேறு ஒரு பரிமாணத்தில் இருக்கும். கார்த்திக், கௌதம் கார்த்திக் இணைந்து நடித்தது மாதிரி தமிழ் சினிமாவில் நடக்குமா என்று தெரியவில்லை.

சென்னை, டெல்லி, பெங்களூரு ஆகிய மாநகரங்களில் நடக்கும் ஒரு விஷயத்தை எடுத்து கதையாக்கி ஒரு படத்தை எடுத்திருக்கிறோம். விண்டேஜ் கார்த்திக் சாரை இந்த படத்தில் பார்ப்பீர்கள். கௌதம் கார்த்திக்கின் மெனக்கெடல் இந்த படத்தின் பெரிய பலம். கௌதம் படப்பிடிப்பிற்கு சரியான நேரத்தில் வருவார். அந்த சிறப்பான குணத்தை அவர் தொடர்ந்து கடைபிடிக்க வேண்டும்.

ரெஜினா மிகவும் இனிமையான ஒரு நடிகை. பைரவி என்ற கதாபாத்திரம் தான் சந்திரமௌலி படத்தின் முதுகெலும்பு. அந்த கதாபாத்திரத்தில் வரலட்சுமி நடித்திருக்கிறார். மகேந்திரன் சார் வில்லனாக, சிறப்பாக நடித்திருக்கிறார். அகத்தியன் சார் கார்த்திக்கின் நண்பராக நடித்துள்ளார்.

ரிச்சர்ட் எம் நாதன் இல்லையென்றால் 45 நாட்களில் படத்தை முடித்திருக்க வாய்ப்பே இல்லை. திரைப்படங்களை ரசிகர்களிடம் கொண்டு சேர்ப்பதில் தனஞ்செயன் மிகச் சிறந்த ஒரு தயாரிப்பாளர். தனஞ்செயன், கார்த்திக் சார் இல்லைனா இந்த படம் இல்லை,” என்றார் இயக்குனர் திரு.

நிகழ்ச்சியில் பேசிய தயாரிப்பாளர் தனஞ்செயன்,

ஒரு சினிமா எடுப்பது மிகவும் கஷ்டமான விஷயம், படத்தில் வேலை செய்யும் ஒருவர் நமக்கு ஆதரவாக இல்லையென்றால் கூட படம் முடிப்பது கஷ்டம் தான். படம் சிறப்பாக வருவதற்கு முக்கிய காரணம் இயக்குனர் திரு தான். அவருக்கு நல்ல வாய்ப்பு கிடைத்தால் மிகச் சிறப்பான படத்தை எடுத்துக் கொடுப்பார். அவர் தயாரிப்பாளர்களின் இயக்குனர்.

சமீபத்தில் ஒரு குறிப்பிட்ட 50 பேருக்கு படத்தைத் திரையிட்டு காண்பித்தோம், நல்ல வரவேற்பு கிடைத்தது. கார்த்திக் சாரை படத்துக்குள் கொண்டு வர முக்கிய காரணம் கௌதம் கார்த்திக். இந்த படத்தை உங்களுக்காகத்தான் பண்றேன் என சொல்லி உரிமையோடு நடிக்க வந்தார் வரலட்சுமி. ரெஜினா நடிப்பில் அடுத்த கட்டத்துக்கு போக நிறைய வாய்ப்புகள் உள்ள படமாக இது அமைந்திருக்கிறது.

மிகவும் திட்டமிட்டு வேலை செய்தோம், ஆனாலும் சில காரணங்களால் படம் தாமதமாகியது. ஜூலை 6ஆம் தேதி படம் சிறப்பாக வர இருக்கிறது. 300 திரையரங்குகளில் படத்தை வெளியிட இருக்கிறோம், எல்லா ஊர்களிலும் படத்துக்கு எதிர்பார்ப்பு பெருகி இருக்கிறது. அதற்கு முக்கிய காரணமாக சாம் சிஎஸ்சின் இசையும், ரிச்சர்ட் எம் நாதனின் ஒளிப்பதிவும் அமைந்திருக்கிறது.

படத்தை பற்றி சமூக வலைத்தளங்களில் நிறைய எழுதிய, எதிர்பார்த்திருந்த ரசிகர்களுக்காக ஒரு மொபைல் ஆப் உருவாக்கியிருக்கிறோம். அதில் கலந்து கொள்ளும் ரசிகர்களுக்கு மொபைல், வாட்ச் என தினமும் பரிசுகள் உண்டு. மேத்யூ, தியாகு என இருவரும் இந்த அப்ளிகேஷனை வடிவமைத்திருக்கிறார்கள்,” என்றார் தயாரிப்பாளர் தனஞ்செயன்.

படத்தின் நாயகன் கார்த்திக் பேசுகையில்,

“நான் ஊட்டியில் படிக்கும் போது, என் அப்பாவோடு நிறைய பழக வாய்ப்பு கிடைக்கவில்லை. ‘கடல்’ படத்துக்குப் பிறகு சென்னை வந்த பின்பு தான் அவரோடு பக்கத்தில் இருந்து பழக ஆரம்பித்தேன். ஆனால், இந்த படத்தில் தான் படப்பிடிப்பில் அவரை நேரில் பார்த்தேன். அவரின் உழைப்பை பார்த்து வியந்தேன். இயக்குனர் திருவுக்கு யாரிடம் எப்படி வேலை வாங்கணும்னு தெரியும், சிறப்பான படத்தை கொடுத்திருக்கிறார்,” என்றார்.

ஜுலை 6ம் தேதி ‘மிஸ்டர் சந்திரமௌலி’ வெளியாகிறது.

Read Previous

நல்ல நடிகை எனப் பெயர் எடுக்க வேண்டும் – உபாசானா

Read Next

செம போத ஆகாதே – ஐட்டம்காரன் – பாடல் வீடியோ