தமிழ்த் திரையுலகத்தில் 90களின் கடைசியில் அறிமுகமாகி சுமார் 10 வருடங்கள் முன்னணி நாயகியாக விளங்கியவர் சிம்ரன். அதன்பின் திருமணம் செய்து கொண்டு நடிப்பை விட்டு சிறிது காலம் ஒதுங்கியிருந்தார்.
பின்னர் மீண்டும் ‘சேவல்’ படம் மூலம் நடிக்க வந்தார். கடந்த வருடம் வெளிவந்த ‘துப்பறிவாளன்’ படத்தில் சிறிய கதாபாத்திரத்தில் நடித்தார்.
தற்போது, விக்ரம் நடிக்கும் ‘துருவ நட்சத்திரம்’, சிவகார்த்திகேயன் நடிக்கும் ‘சீமராஜா’, மற்றும் அரவிந்த்சாமி நடிக்கும் ‘வணங்காமுடி’ ஆகிய படங்களில் நடித்து வருகிறார்.
தமிழ் சினிமாவில் அறிமுகமாகி 20 வருடங்கள் ஆனாலும், ரஜினிகாந்த் படம் ஒன்றில் அவர் நடித்ததே இல்லை. கமல்ஹாசன், அஜித், விஜய், சூர்யா, விக்ரம் ஆகியோருடன் நடித்தாலும் ரஜினிகாந்த்துடன் நடிக்காமலேயே இருந்தார். அந்தக் குறை தற்போது நீங்கிவிட்டது.
சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த், விஜய் சேதுபதி, பாபி சிம்ஹா, மேகா ஆகாஷ் மற்றும் பலர் நடிக்கும் படத்தில் தற்போது சிம்ரனும் இணைந்துள்ளார். இது பற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பை சன் பிக்சர்ஸ் வெளியிட்டுள்ளது. மேலும் இந்தப் படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் ஹிந்தி நடிகரான நவாசுதீன் சித்திக்கும் நடிக்கிறார்.
தற்போது படப்பிடிப்பு டேராடூன் நகரில் நடைபெற்று வருகிறது.