2 D எண்டெர்டெயின்மெண்ட் நிறுவனம் சார்பில் சூர்யா தயாரிப்பில், கல்யாண் இயக்கத்தில், விஷால் சந்திரசேகர் இசையமைப்பில் ஜோதிகா, ரேவதி, யோகி பாபு மற்றும் பலர் நடித்துள்ள படம் ஜாக்பாட்.
இப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. விழாவில் படத்தின் தயாரிப்பாளர் சூர்யா, இயக்குனர் கல்யாண், ஜோதிகா, இசையமைப்பாளர் விஷால் சந்திரசேகர் உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
நிகழ்ச்சியில் பேசிய நடிகர் சூர்யா,
“இன்றைய ஹீரோ இசையைமப்பாளர் விஷால் சந்திரசேகர். ஜோ தான் என்னோட ஜாக்பாட். 100 சதவிகிதம் 200 சதவிகிதம் எந்த காம்ப்ரமைஸும் இல்லாமல் சரியாகச் செய்யும் அம்மா அவர். அவர் தேர்ந்தெடுக்கிற படங்கள் எல்லாவற்றையும் மிகவும் யோசித்து யோசித்து தான் செய்வார்.
தமிழ்நாட்டுப் பெண்கள் ஒவ்வொருவரும் அவர்களைப் பற்றி, சமூகத்தைப் பற்றி மிகச் சரியான மதிப்பீட்டை வைத்திருப்பார்கள். ஜோதிகாவுக்கு இந்தப் படம் சரியான படம். சில ஆக்ஷன் காட்சிகளைப் பார்த்து எப்படி இதையெல்லாம் செய்திருப்பார் என்று ஆச்சரியப்பட்டேன். ஆறு மாதம் சிலம்பம் கத்துக்கிட்டார். மீண்டும் நான் ஜோதிகாவிடம் இருந்து நிறைய கற்றுக் கொண்டேன்,” என்றார்.
நடிகை ஜோதிகா பேசுகையில்,
“முதல் நன்றி சிவகுமார் அப்பாவிற்கு. 2 D எண்டெர்டெயின்மெண்ட் நிறுவனத்தில் இரண்டு வருடத்துக்குப் பிறகு நடிக்கிறேன். இது எனக்கு ரொம்ப புதுசான படம். இப்படி ஒரு கதையில் நான் நடித்ததே இல்லை. ரேவதி மேடத்திற்கு ஈக்குவலான ரோல். அதற்கு கல்யாண் சாருக்கு நன்றி.
ஹீரோஸ் என்னென்ன பண்றாங்க என்பதைப் பார்த்து எல்லாவற்றையும் எங்களைப் பண்ணச் சொன்னார். பாடல்கள் ரொம்ப நல்லாருந்தது. பெண்களுக்குப் பவர் வேண்டும். இந்தப் பாடல்களில் அது இருக்கிறது.
எல்லா ஷாட்ஸ்களையும் பிரம்மாண்டமாக எடுத்திருக்கிறார்கள். ஒரே நாளில் ஒரு பாடலை எடுத்து முடித்தார் பிருந்தா மாஸ்டர். இந்தப் படத்தில் எனக்கு என் ஹஸ்பெண்ட் சண்டைக் காட்சிகளுக்கான கிட்ஸ் நிறைய வாங்கிக் கொடுத்தார். அவர் தான் என்னோட எல்லா முயற்சிகளுக்கும் கை கொடுப்பவர். அவர் இல்லை என்றால் நான் இல்லை.
என்னோட ஜாக்பாட் சூர்யா தான். பெரும்பாலும் நடிகைகள் நடித்த படங்களை அந்தந்தப் படங்களின் ஹீரோக்களோடு தான் ஒப்பிட்டுப் பேசுவார்கள். ஆனால் நான் பெரிய பெரிய ஹீரோயின்களோடு நடிக்கும் வாய்ப்பினைப் பெற்றிருக்கிறேன். அதைப் பெருமையோடு சொல்லிக் கொள்கிறேன்,” என்றார்.