சீனு ராமசாமி இயக்கி வரும் ‘இடம் பொருள் ஏவல்’ படத்தில் யுவன்ஷங்கர் ராஜா இசையில் வைரமுத்து அனைத்துப் பாடல்களையும் எழுதுகிறார். அவற்றில் ‘அம்மா’ பற்றிய ஒரு பாடலை இளையராஜா பாடப் போவதாக கடந்த வாரம் ஒரு வாரப் பத்திரிகையிலும், இன்றைய ஆங்கில நாளிதழ் ஒன்றிலும் செய்தி வெளியாகியுள்ளது.
வைரமுத்துவை ஒரு பாடலாசிரியராக ‘நிழல்கள்’ படத்தின் மூலம் அறிமுகம் செய்ததே இளையராஜாதான். இளையராஜாவும், வைரமுத்துவும் 80களில் எண்ணற்ற ஹிட்டான பாடல்களைக் கொடுத்தவர்கள். அதன் பின் அவர்களிருவருக்கும் இடையே பிரச்சனை ஏற்பட்டு பிரிந்தார்கள். இவர்களிருவரையும் சேர்த்து வைக்க பலர் முயற்சி செய்தும் அது நடக்காமலே போய் விட்டது.
இந்த நிலையில் ‘இடம் பொருள் ஏவல்’ படத்தில் யுவன் கேட்டுக் கொண்டதாலும், சீனு ராமசாமி கேட்டுக் கொண்டதாலும் இளையராஜா, வைரமுத்து எழுதிய பாடலைப் பாட சம்மதம் சொல்லிவிட்டார் என்று செய்திகள் வெளியாகின.
அதைத் தொடர்ந்து நாம் விசாரித்த போது, இளையராஜா மேற்படி வந்த செய்தியைப் பார்த்து கடும் கோபத்தில் இருப்பதாக அவருக்கு நெருங்கிய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இப்படி ஒரு தவறான தகவலை படத்தின் பப்ளிசிட்டிக்காக இயக்குனர் சீனு ராமசாமி பரப்பி வருவதாகவும் அவர்கள் சொல்கின்றனர்.
தற்போது இளையராஜா தமிழ், தெலுங்கு, இந்தி என பல மொழிகளிலும் பிஸியாக இசையமைத்துக் கொண்டிருக்கிறார். அதே சமயம், புதிதாக வந்துள்ள பல இசையமைப்பாளர்கள் இளம் கவிஞர்களையும், பல புதிய கவிஞர்களையும் வைத்துப் பாடல்களை எழுதி வருகின்றனர். ஒரு படத்தில் மொத்தப் பாடல்களையும் ஒரு காலத்தில் முழுவதுமாக எழுதி வந்த வைரமுத்துவால், தற்போது அப்படி எழுத முடியவில்லை.
இதனால், அவர் இளையராஜாவுடனான தனது நட்பை மீண்டும் புதுப்பித்துக் கொள்ள எண்ணி வருகிறார் என்றும் கோடம்பாக்கத்தில் பேசிக் கொள்கிறார்கள். யுவன் ஷங்கர் ராஜா இசையில் வைரமுத்துவின் மகனாக மதன் கார்க்கி ‘பிரியாணி’ படத்தில் பாடல் எழுதியதைத் தொடர்ந்து தற்போது ‘அஞ்சான்’ படத்திலும் ஒரு பாடலை எழுதியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இன்றைய தலைமுறையினர் ஒன்று சேர்ந்து பணியாற்றும் போது அவர்களின் அப்பாக்கள் மீண்டும் இணைய மாட்டார்களா என்ற எதிர்பார்ப்பும் ஒரு பக்கம் எழுந்துள்ளது.
உண்மையான இசை ரசிகர்கள் இளையராஜாவும், வைரமுத்துவும் மீண்டும் இணைந்து பணியாற்றினால் 80களில் இருந்த ‘இசை வசந்த காலம்’ மீண்டும் வரும் என்கிறார்கள்.
ஆனால், இவற்றிற்கெல்லாம் காலம்தான் பதில் சொல்ல வேண்டும்…