“வெயில், அங்காடித் தெரு, அரவான்” போன்ற படங்களின் மூலம் தமிழ் சினிமாவில் தரமான இயக்குனராகவும், தமிழ் சினிமாவை மற்றவர்களைப் போல் பார்க்காமல் வேறு பார்வையில் அளவுக்கதிமான காதலுடன் பார்க்கும் இயக்குனர்களில் குறிப்பிடத்தக்கவர் வசந்தபாலன்.
அவரது இயக்கத்தில் ஒய் நாட் ஸ்டுடியோஸ் சசிகாந்த், ரேடியன்ஸ் மீடியா வருண் மணியன் தயாரிப்பில், ஏ.ஆர்.ரகுமான் இசையமைப்பில் சித்தார்த், பிருத்விராஜ், வேதிகா, அனைகா, நாசர், தம்பி ராமையா, சிங்கம் புலி மற்றும் பலர் நடித்துள்ள ‘காவியத் தலைவன்’ படம் அடுத்த மாதம் 14ம் தேதி உலகம் முழுவதும் வெளியாக உள்ளது.
படம் வெளிவருவதை முன்னிட்டு பத்திரிகையாளர்களைச் சந்தித்த வசந்தபாலன், “இன்றைய பரபரப்பான, படபடவென வெளிவந்து கொண்டிருக்கும் ஆக்ஷன் படங்களுக்கு மத்தியில் ‘காவியத் தலைவன்’ படம் கண்டிப்பாகப் பேசப்படும் ஒரு படமாக இருக்கும் என்றார்.
‘‘காவியத் தலைவன்’ படம் நாடக உலகத்தை பின்னணியா வச்சி எடுக்கப்பட்டிருக்கிற படம். அதை படத்தோட ஆரம்பத்துல இருந்து முடிவு வரைக்கும் பயன்படுத்தியிருக்கிறோம்.
இந்தக் கதையை வந்து சாஃப்ட்வேர் கம்பெனி பின்னணியில கூட கொடுத்திருக்க முடியும். எந்த உலகத்துலயும் பொருத்திப் பார்க்க முடியும், 100 வருடத்திற்கு முன்னாடியோ 100 வருடத்திற்கு பின்னாடியோ கூடப் பொருத்திப் பார்க்கலாம். இந்தப் படத்தைப் பார்க்கும் போது எந்த ஒரு பின்னணி கூடவும் தாராளமா பொருத்திப் பார்க்கலாம்.
இந்தப் படத்தோட உள் அம்சத்தைப் பார்க்கும் போது நட்பு, சோகம், காதல் இப்படி எல்லா விஷயங்களோடதான் கொடுத்திருக்கிறேன். அப்படியோ ‘ரா’வாலாம் கொடுத்துடலை.
படத்துல இரண்டு ஹீரோ சித்தார்த், பிருத்விராஜ் இருக்காங்க, வேதிகா, அனைகா-ன்னு இரண்டு ஹீரோயின் இருக்காங்க. காமெடிக்கு தம்பி ராமையா, சிங்கம்புலி இருக்காங்க. ‘சண்டிக் குதிரை…’ மாதிரி பாடல் இருக்கு. எல்லாமும் கலந்து ‘சுகர் கோட்டட்’ –ஆதான் இந்தப் படத்தைக் கொடுத்திருக்கேன்.
ஏ.ஆர்.ரகுமான் சார் இந்தப் படத்தை ஒரு மியூசிக்கல் படமா கொடுக்கிறதுக்காக நிறைய உழைச்சிருக்காரு. நாட்டுப்புற இசையையும் நாடக உலகத்துக்குப் பொருத்தமான இசையையும் அவர் கொடுத்திருக்காரு.
எப்படி ‘அங்காடித் தெரு’ படத்துல ரங்கநாதன் தெருவை பின்னணியா வச்சி ஒரு காதல் கதை வழியா, ரங்கநாதன் தெருவைப் பத்தி சொன்னேன். அந்த மாதிரிதான் இந்தப் படத்துல இருக்கிற கதை வழியா நாடக உலகத்தைப் பத்திச் சொல்லணும்னு ஆசைப்பட்டேன்.
இந்தப் படத்தை ஆரம்பிக்கும் போதே, கிட்டப்பா, சங்கரதாஸ் சுவாமிகள், கே.பி.சுந்தராம்பாள் அவங்களுக்கு பெரிய வணக்கத்தோடதான் இந்தப் படத்தை ஆரம்பிச்சிருக்கேன். அவங்களுக்கு ஏதாவது செய்ய முடியுமாங்கற, அந்தக் காலக்கட்டத்தை படமாக்கிட முடியுமாங்கற ‘பர்சனல் லவ்’ காரணமாதான் இந்தப் படத்தை எடுத்திருக்கேன்.
ரொம்ப பரபரப்போட இல்லாம நிதானமா அந்தக் காலக்கட்டத்துக்கே உரிய ஒரு அழகுணர்ச்சியோடதான் கொடுத்திருக்கோம். வழக்கமான பரபரப்பான திரைக்கதை, இன்னைக்கிருக்கிற மாதிரி படபடன்னு ஓடாம, தமிழ் சினிமாவுல தரமான படங்களா நீங்க பார்த்து ரசிச்ச படங்கள் மாதிரி இந்தப் படத்தையும் ரசிக்கிற மாதிரி கொடுத்திருக்கோம். இன்றைய ரசிகர்களைக் கவரும் விதத்துலயும் இந்தப் படம் கண்டிப்பா இருக்கும், ” என்கிறார் இயக்குனர் வசந்தபாலன்.