100 கோடியைத் தொட்ட ‘கத்தி’ வசூல்…

Kaththi - Gallery - 2_00010‘திருட்டு மாங்காய்க்குதான் ருசி அதிகம்’ என்பார்கள். அப்படிப்பட்ட ஒரு திருட்டுக் கதைதான் ‘கத்தி’ படத்தின் கதை என்பதை சமூக வலைத்தளங்களில் பலரும் விமர்சனம் செய்து எழுதிக் கொண்டு வருகிறார்கள்.

அது சம்பந்தமாக ‘கத்தி’ படத்தின் கதையை எழுதிய மிஞ்சூர் கோபி என்பவர் அளித்த வீடியோ பேட்டி, கோபியின் பார்வை எப்படிப்பட்டது என்பதை விளக்கும் ஒரு தொலைக்காட்சி நிகழ்ச்சியின் வீடியோ, திரைப்படத் துறையைச் சார்ந்த சிலரது கருத்துக்கள் அதற்குச் சான்றாக பிரதிபலித்து வருகின்றன.

ஆனால், இதுவரை அதைப் பற்றி ‘கத்தி‘ வெற்றியால் மகிழ்ச்சியில் திளைத்து வரும் இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் எந்த விதமான கருத்தையும் தெரிவிக்காமல் இருந்து வருகிறார்.

‘துப்பாக்கி’ படத்தின் வசூலை ‘கத்தி’ படம் வெளியான சில நாட்களுக்குள்ளேயே கடந்து விட்டது என்று ஏற்கெனவே செய்திகள் வெளியாகியிருந்தது. இந்நிலையில் தற்போது படம் 100 கோடி ரூபாய் வசூலைத் தொட்டுவிட்டதாக இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் அவருடைய டிவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

“கத்தி‘ 12 நாட்களில் 100 கோடி, தொடர்ந்து நல்லபடியாக ஓடிக் கொண்டிருக்கிறது. ‘கத்தி’ மொத்த தியேட்டர் வசூல் 100.7 கோடி. இந்தியாவில் 80.5 கோடி, வெளிநாடுகளில் 20.2 கோடி, ரசிகர்களுக்கும், மீடியாக்களுக்கும் நன்றி” என அவர் தெரிவித்திருக்கிறார்.

இப்போது ‘கத்தி’  படத்தின் ரீமேக் உரிமை எத்தனை கோடிக்கு விலை போகும் என்ற பேச்சு எழுந்து வருகிறது. அதற்கு முன்பாகவாவது மிஞ்சூர் கோபிக்கு ஒரு நியாம் கிடைக்கும் என்று பலரும் எதிர்பார்த்து வருகிறார்கள்.

Read Previous

Lingaa – Official Teaser

Read Next

‘Kannadi Bommaigal’ – Docu-Fiction Film…