ராதாரவியை நீக்குவீர்களா…சரத்குமாருக்கு விஷால் கேள்வி….

actor vishalநடிகர் சங்க விவகாரம் தொடர்பாக, நடிகர் விஷாலை நடிகர் சங்கத்திலிருந்து நீக்குவோம் என்று திருச்சியில் பத்திரிகையாளர்களிடம் நடிகர் சரத்குமார் பேசினார்.

அதைத் தொடர்ந்து நடிகர் சங்க கட்டிட விவகாரத்தில் சரத்குமார் தலைமையிலான நடிகர் சங்க அமைப்புக்கும், விஷால் உட்பல பல இளம் நடிகர்கள் சார்ந்த குழுவுக்கும் இடையே மோதல் வெடிக்க ஆரம்பித்துள்ளது.

அதைத் தொடர்ந்து நடிகர் சங்கத் தலைவர் சரத்குமாரிடம் ராதாரவி, காளை ஆகியோரை சங்கத்தை விட்டு நீக்குவீர்களா எனக் கேட்டு நடிகர் விஷால் கேள்வி எழுப்பி அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,

“நடிகர் சங்கத் தலைவர் சரத்குமாரின் தெளிவற்ற, போலித்தனமான பேச்சைக் கேட்டு நான் மிகவும் அதிர்ச்சியடைந்தேன். ஒரு நடிகராக நடிகர் சங்கத்தின் ஒவ்வொரு உறுப்பினரையும் நான் மிகவும் மதிக்கிறேன்.

அவர்கள் விரும்பினால் நடிகர் சங்கத்திலிருந்து என்னை வெளியேற்றும் முடிவை நான் ஏற்றுக் கொள்கிறேன். ஆனால், நடிகர் சங்கத்திற்கு எதிராக நான் பேசினேன் என்பதற்கான சரியான ஆதாரத்தை சரத்குமார் கொடுக்கட்டும் என பணிவோடு கேட்டுக் கொள்கிறேன்.

ராதாரவியும், காளையும், நடிகர்களை தரக்குறைவான வார்த்தைகளால் அதிலும் ‘நாய்கள்’ என பேசியதைக் கேட்டு ஒரு நடிகராக உணர்வுபூர்வமாக நான் மிகவும் பாதிப்படைந்தேன்.

விதி எண் 13ன்படி, யாராவது ஒரு சங்க உறுப்பினர் நடிகர்களின் உணர்வை காயப்படுத்தினால் அவர்கள் தண்டிக்கப்பட வேண்டும். சீனியர் நடிகரான குமரிமுத்து மீது அப்படி ஒரு குற்றச்சாட்டு எழுந்து அவர் சங்கத்தை விட்டு நீக்கப்பட்டார்.

அப்படியிருக்க, வார்த்தைகளால் காயப்படுத்திய ராதாரவி, காளை ஆகியோர் மீதும் அதே போன்று நடவடிக்கை எடுக்க வாய்ப்புள்ளது.

நீதி என்பது அனைவருக்கும் பொதுவான ஒன்று என்றால் ராதாரவியும் காளையும் முதலில் நடிகர் சங்கத்திலிருந்து உடனடியாக நீக்கப்படவேண்டியவர்கள்,” என விஷால் அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

Read Previous

கானா பாடகராக மகாபா ஆனந்த் நடிக்கும் ‘அட்டி’…

Read Next

இன்றைய ரிலீஸ் – 5 படங்கள்…