இந்திய – ஜப்பான் கூட்டுத் தயாரிப்பில் உருவாகி வரும் படம் ‘ஜம்போ 3டி’.
“ஓர் இரவு, அம்புலி 3டி, ஆ” படங்களுக்குப் பிறகு ஹரி – ஹரிஷ் இருவரும் இணைந்து இயக்கும் மூன்றாவது படம் இது. இந்தப் படத்திற்கு ஸ்ரீவித்யா கலை பாடல்களுக்கு இசையமைக்க, வெங்கட் பிரபு ஷங்கர் பின்னணி இசையமைக்கிறார்.
கோகுல்நாத், அஞ்சனா, சுகன்யா, பேபி ஹம்சிகா, யாக் ஜாப்பி, ஈரோடு மகேஷ், கும்கி அஷ்வின் மற்றும் பலர் இந்தப் படத்தில் நடிக்கிறார்கள்.
படத்தைப் பற்றி இயக்குனர்கள் கூறியதாவது,
“இப்படத்தின் பெரும்பாலான காட்சிகள் ‘மைமிங் 3டி’ முறையில் உருவாக்கி இருக்கிறோம். இதனால், உலகத்தில் உள்ள எந்த நாட்டைச் சேர்ந்தவர்கள் பார்த்தாலும் அவர்களுக்கும் இந்தப் படம் புரியும்.
ஜம்போ என்பது ஜம்புலிங்கம் என்ற கதாநாயகனின் பெயர்ச் சுருக்கம். வெளிநாடுகளுக்குச் சென்று கலை நிகழ்ச்சிகள் நடத்தும், மேஜிக் கலைஞர்கள் கொண்ட ஒரு குழுவைப் பற்றிய கதை இது. ஜப்பானில் மொழி தெரியாமல் தொலைந்து போகும் நாயகன், நாயகி ஒரு குழந்தை எப்படி இந்தியாவிற்குத் திரும்புகிறார்கள் என்பதுதான் படத்தின் கதை.
இப்படத்தில் நாயகனாக நடிக்கும் கோகுல்நாத் இதற்கு முன் நாங்கள் இயக்கிய ‘அம்புலி, ஆ’ ஆகிய படங்களில் நடித்திருக்கிறார். இப்படத்தில் அவர் மைமிங் முறையில் சிறப்பாக நடித்திருக்கிறார்.
நடிகை சுகன்யா நீண்ட நாட்களுக்குப் பிறகு ஒரு வித்தியாசமான கதாபாத்திரத்தில் இந்தப் படத்தில் நடித்திருக்கிறார். இப்படத்தில் தமிழ்க் கலைஞர்களுடன் ஜப்பானியக் கலைஞர்களும் இணைந்து நடித்திருக்கிறார்கள்.
ஜப்பானில் 90 சதவீதப் படப்பிடிப்பும், இந்தியாவில் 10 சதவீதப் படப்பிடிப்பும் நடக்கிறது. ஜப்பான் படப்பிடிப்பு முடிவடைந்து விட்டது. அடுத்ததாக இந்திய மலைக்கிராமம் ஒன்றில் படப்பிடிப்பை நடத்தி வருகிறோம்.
‘அம்புலி 3டி’ படம் போல இந்தப் படமும் குழந்தைகள் முதல் பெரியவர் வரை அனைவரும் பார்க்கும்படியான படமாக உருவாக்கி வருகிறோம்.
இதுவரை நாங்கள் இயக்கிய மூன்று படங்களையும் ஒரு த்ரில்லர் வகைப் படமாகவே கொடுத்திருந்தோம். இந்தப் படத்தில் நகைச்சுவைக்கும் முக்கியத்துவம் அளித்திருக்கிறோம். விரைவில் இசை வெளியீட்டையும் அடுத்து படத்தையும் வெளியிட முடிவு செய்துள்ளோம்,” என்கின்றனர் இயக்குனர்கள்.
எம்எஸ்ஜி மூவீஸ் சார்பாக ஜி.ஹரி நாராயணன் இந்தப் படத்தைத் தயாரிக்கிறார்.