‘லிங்கா’ திரைப்படம் நஷ்டத்தை ஏற்படுத்தியதாகக் கூறி சிலர் சர்ச்சைகளை எழுப்பிய நிலையில் அது பற்றிய விளக்க அறிக்கை ஒன்றை வேந்தர் மூவீஸ் நிறுவனம் நேற்று இரவு வெளியிட்டது. அந்நிறுவனத்தின் சார்பாக டி.சிவா அந்த அறிக்கையில் கூறியிருப்பதாவது,
“கடந்த 2 நாட்களாக லிங்கா படத்தின் வசூல் பற்றிய தவறான தகவல்களை சில தவறான நபர்கள் பரப்பி வருகிறார்கள்.
‘லிங்கா’ வெளியான சமயத்தில் தமிழகமெங்கும் அரையாண்டுத் தேர்வு நடப்பதாலும், தமிழ்த் திரையுலக வரலாற்றில் முதல் முறையாக 600க்கும் மேற்பட்ட திரையரங்குகளில் திரையிட்டதாலும், எதிர்பார்த்த அளவை விட சற்று வசூல் குறைந்தது.
ஆனால் இன்று (வெள்ளிக்கிழமை) மாலை முதல் குடும்பம் குடும்பமாக கூட்டம் கூட்டமாக மக்களின் வருகையால் திரையரங்குகள் நிரம்பி வருகிறது. இதுவே படத்தின் வெற்றிக்கு சாட்சி.
‘லிங்கா’ மக்களுக்குப் பிடித்த படம், விநியோகஸ்தர்களுக்கு லாபம் தரும் படமாகவும் நிச்சயம் இருக்கும்.எனவே படத்தின் வசூல் பற்றிய எல்லா விபரங்களும் நாங்கள் அறிவிப்பது மட்டுமே உண்மையானது.
மேலும் ‘லிங்கா’ பற்றிய அவதூறான செய்திகளைப் பரப்புவோர் மீது சட்டப்படியான நடவடிக்கை எடுக்கப்படும் என்பதை தெரிவித்துக் கொள்கிறோம்,” என அந்த அறிக்கையில் குறிப்பிட்டிருக்கிறார்கள்.