இன்னும் ஒரே ஒரு வாரம்தான் ‘என்னை அறிந்தால்’ கொண்டாட்டம் ஆரம்பமாகிவிடும். அஜித்தைப் பொறுத்தவரையில் ஒரு படம் முடிந்தவுடன்தான் அடுத்த படத்தில் நடிக்க ஆரம்பிப்பார்.
‘என்னை அறிந்தால்’ படத்தின் படப்பிடிப்பு கடந்த சில வாரங்களுக்கு முன்பே முடிந்து விட்டது. தொடர்ச்சியான படப்பிடிப்புகளால் வீட்டில் கொஞ்சம் ஓய்வெடுத்து வருகிறார்.
அஜித் நடிக்கும் அடுத்த படத்தை ‘சிறுத்தை, வீரம்’ படங்களை இயக்கிய சிவாதான் இயக்கப் போகிறார். அந்தப் படத்தின் படப்பிடிப்பு அடுத்த மாதம் ஆரம்பமாக உள்ளது.
படத்தின் கதைக்கு இறுதி வடிவம் கொடுக்கும் பணிகள் நடந்து வருகின்றன. தொழில்நுட்பக் கலைஞர்கள், மற்ற நடிக, நடிகையர் தேர்வு செய்யும் பணியும் மும்முரமாக நடந்த வருகிறதாம்.
ஆனால், படத்தில் யாரை நாயகியாக தேர்வு செய்யலாம் என்பதில்தான் இன்னமும் குழப்பம் நீடித்து வருவதாகத் தெரிகிறது. அஜித்துடன் ஜோடியாக நடிக்க சில முன்னணி கதாநாயகிகள் கடந்த சில மாதங்களாகவே போட்டி போட்டு வருகிறார்கள்.
அந்த ரேஸில் ஸ்ருதிஹாசன், சமந்தா, ஹன்சிகா, தமன்னா உள்ளிட்ட நாயகிகள் இருப்பதாகச் சொல்கிறார்கள். ஆனால், அஜித் இதுவரை யாருடன் ஜோடி சேராமல் இருக்கிறாரோ அவருக்குத்தான் அந்த அதிர்ஷ்டம் காத்திருப்பதாகச் சொல்கிறார்கள்.
அந்த அதிர்ஷ்டக் கிளி யாரோ…