புதுப் படங்களில் ஒப்பந்தமாக ஸ்ருதிஹாசனுக்குத் தடை…

‘நான் ஈ’ உட்பட பல தமிழ், தெலுங்குப் படங்களைத் தயாரித்த பிவிபி சினிமாஸ் நிறுவனம் தற்போது தமிழ், தெலுங்கில் ஒரே சமயத்தில் மூன்று படங்களைத் தயாரித்து வருகிறது. அதில் நாகார்ஜுனா, கார்த்தி முதன் முறையாக இணைந்து நடிக்கும் படமும் ஒன்று. இந்தப் படத்தில் நாயகியாக நடிக்க ஸ்ருதிஹாசன் ஒப்பந்தம் செய்யப்பட்டார்.

இப்போது திடீரென அந்தப் படத்தில் நடிப்பதிலிருந்து விலகுவதாக ஸ்ருதிஹாசன் அறிவித்ததைத் தொடர்ந்து ஸ்ருதிஹாசனுக்கும், தயாரிப்பு நிறுவனத்திற்கும் இடையே பிரச்சனை எழுந்துள்ளது. இதையடுத்து அந்த நிறுவனம் ஸ்ருதிஹாசன் மீது கிரிமினல் மற்றும் சிவில் வழக்குத் தொடர்ந்து, அவர் அடுத்த தீர்ப்பு வரும் வரையில் எந்தப் படத்திலும் ஒப்பந்தம் செய்யப்படக் கூடாது என்ற தடை உத்தரவை வாங்கியுள்ளது.

இது தொடர்பாக பிவிபி நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது,

“சென்னையிலும், ஹைதராபாத்திலும் இயங்கி வரும் பெரிய நிறுவனமான பிக்சர் ஹவுஸ் மீடியா லிமிட்டட் (PVP Cinema) ஸ்ருதிஹாசன் மீது க்ரிமினல் & சிவில் (Criminal & Civil) வழக்கு பதிவு செய்துள்ளது.
இந் நிறுவனம் மிகப் பெரிய பொருட் செலவில் தமிழ், தெலுங்கு ஆகிய இரண்டு மொழியில் தயாரிக்கும் கார்த்திக், நாகர்ஜுனா நடிக்கும், வம்சி இயக்கும் படத்தில் நடிப்பதாக ஒப்பந்தம் அளித்தார். இவருடைய ஒப்பந்த தேதிப்படி மற்ற நடிகர்களிடமும் ஒப்பந்தம் வாங்கியிருந்தோம்.

இந்த ஒப்பந்தத்தின்படி பாதி படம் முடிவடைந்த நிலையில் தன்னால் இப்படத்திற்குக் கொடுக்க தேதி இல்லை, அதனால் தன்னால் நடிக்க இயலாது என்று ஒரு மின்னஞ்சல் (E-Mail) அனுப்பியுள்ளார். எனவே, எங்களுக்கு மற்ற நடிகர்களிடம் வாங்கிய ஒப்பந்த தேதிகளும் வீணாகி விட்டது. அவருடைய இந்த செயலால் எங்களுடைய பண இழப்பு மட்டுமில்லாமல், எங்கள் நிறுவனத்திற்கு உண்டான நன் மதிப்பும் இழக்கப்பட்டுள்ளது.

இதனால் எங்களுக்கு பல கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது, நேரமும் வீணாகிவிட்டது. மேலும் மற்ற நடிகர்களிடம் வாங்கிய தேதிகளை மாற்ற வேண்டிய கட்டாயம் உருவாகிவிட்டதால், அந்த நடிகர்களுக்கு எங்கள் நிறுவனத்தின் மீதான நல்லெண்ணமும், மரியாதையும் இழக்கப்பட்டுள்ளது.

அவருடைய இந்த நடவடிக்கை மீண்டும் நடக்கக் கூடாது என்பதற்காகவும் மற்றும் எங்கள் நிறுவனத்தின் பங்குதாரர்களுக்கு எந்தவித பாதிப்பும் ஏற்படக் கூடாது என்பதற்காகவும் இதை பிக்சர் ஹவுஸ் மீடியா லிமிட்டட் (PVP Cinema) நிறுவனம் சிவில் & க்ரிமினல் (Criminal & Civil) வழக்காக பதிவு செய்துள்ளது. இந்த வழக்கு விசாரணையை நீதிபதி அவர்கள் ஏற்றுக் கொண்டு, இனி ஸ்ருதிஹாசன் அவர்கள், அடுத்த தீர்ப்பு வரும் வரையில் எந்நிறுவனமும் அவரை ஒப்பந்தம் செய்யக் கூடாதென்றும் ஆணை பிறப்பித்துள்ளது. மேலும் இந்த கிரிமினல் (Criminal) குற்றத்திற்காக அவரை விசாரனை செய்யும்படி காவல்துறைக்கு நீதிபதி அவர்கள் ஆணை பிறப்பித்துள்ளார்,” என்று அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Read Previous

‘காக்கா முட்டை’ குழுவினருக்கு தனுஷ் பாராட்டு…

Read Next

Sagaptham – Trailer

Most Popular