விஷால் பிலிம் பேக்டரி தயாரிப்பில், மித்ரன் இயக்கத்தில், யுவன் ஷங்கர் ராஜா இசையமைப்பில், விஷால், அர்ஜுன், சமந்தா மற்றும் பலர் நடித்து வெளிவந்த ‘இரும்புத் திரை’ படத்தின் 100வது நாள் விழா இன்று சென்னையில் சிறப்பாக நடைபெற்றது.
விழாவில் படக்குழுவினர், திரையுலகப் பிரமுகர்கள், அனைத்து சங்க உறுப்பினர்கள் என பலர் கலந்து கொண்டனர்.
நிகழ்ச்சியில் பேசிய விஷால்,
“சில படங்கள் வெற்றியடைந்தாலும் சில படங்கள் தான் திருப்புமுனையாக அமையும். ‘இரும்புத் திரை’ எனக்கு திருப்புமுனையாக அமைந்த படம். இப்படத்தின் கதையைக் கேட்கும் போதே இந்தப் படம் என் சினிமா வாழ்வில் முக்கியமான படமாக இருக்கும் என முடிவு செய்து விட்டேன். யுவன் என்னுடன் பிறந்த சகோதரன் மாதிரி.
நான் முதலில் அர்ஜுன் சாரிடம்தான் உதவி இயக்குநராகப் பணிபுரிந்தேன். என்னுடைய முதல் சம்பளம் 100 ரூபாய். சிறிது சிறிதாக சேர்த்து என் அம்மாவிற்கு ஒரு புடவையும், அப்பாவுக்கு ஷேவிங் கிட்டும் ம் வாங்கிக் கொடுத்தேன். இப்படம் மாபெரும் வெற்றியடைந்ததற்கு முக்கியக் காரணம் அர்ஜுன் தான்.
சினிமாத் துறையில் கதாநாயகிக்கு திருமணமாகிவிட்டால் அதோடு, நடிக்க வரமாட்டார்கள். அப்படியே வந்தாலும் அக்கா கதாபாத்திரம், அம்மா கதாபாத்திரத்தில் தான் நடிப்பார்கள் என்ற நம்பிக்கையை உடைத்து, கதாநாயகியாக நடித்து அதில் வெற்றியும் பெற்றிருக்கிறார் சமந்தா,” என்றார் விஷால்.
நிகழ்ச்சியில் படத்தில் பணிபுரிந்த அனைவருக்கும் கேடயம் வழங்கப்பட்டது. ஆனால் விஷாலுக்கு மட்டும் வழங்கப்படவில்லை.
கனடா நாட்டிலிருந்து வந்த அக்ஷயா என்ற பெண்ணிடம்தான் கேடயத்தைப் பெற வேண்டும் என்று விரும்பினார். பிறந்தது முதல் கண் பார்வையற்ற அந்தப் பெண் விஷாலின் தீவிரமான ரசிகை. விஷால் நடித்த 24 படங்களிலிருந்து எந்த வசனத்தைக் கூறினாலும் அது எந்த படம் என்று சரியாகச் சொல்லிவிடுவார். ஆகையால் அவர் கையால் கேடயம் பெறுவதே தனக்கு மிகச் சிறந்த பரிசாகக் கருதுவதாக விஷால் பேசினார். அந்தப் பெண் நேற்றே விஷாலின் இல்லத்திற்கு வந்து விஷாலிடம் அதற்கான கேடயத்தை வழங்கினார்.