பல வெற்றிப் படங்களுக்கு வினியோகஸ்தராக இருந்த ராஜ்கிரண், ராமராஜன் நாயகனாக நடித்த ‘ராசாவே உன்னெ நம்பி, என்னைப் பெத்த ராசா’ படங்களைத் தயாரித்தார். அதன் பின் அவரே நாயகனாக நடித்த ‘என் ராசாவின் மனசிலே’ படத்தையும் தயாரித்தார்.
அதன் பின் ‘அரண்மனைக் கிளி’ படம் மூலம் இயக்குனராகவும் அறிமுகமானார். இந்தப் படம் மாபெரும் வெற்றி பெற்றது. அடுத்து இயக்கிய ‘எல்லாமே என் ராசாதான்’ படமும் மாபெரும் வெற்றிப் படமாக அமைந்தது.
அதன் பின் படங்களை இயக்குவதை விட்டு, முழு நேர நடிகராக மாறிவிட்டார். கடந்த சில வருடங்களாக சிறந்த குணச்சித்திர நடிகராகவும் அதிகமான பாராட்டுக்களைப் பெற்று வருகிறார்.
இப்போது நீண்ட இடைவெளிக்குப் பிறகு, அதாவது சுமார் 20 ஆண்டுகள் கழித்து மீண்டும் இயக்குனர் அவதாரம் எடுக்க உள்ளதாக தெரிவித்துள்ளார். அந்தப் படம் அநேகமாக ‘என் ராசாவின் மனசிலே’ படத்தின் தொடர்ச்சியாக இருக்கலாம் என்கிறார்.
இது பற்றிய அறிவிப்பு விரைவில் வெளியாக உள்ளது.