சிட்டி சினி கிரியேஷன்ஸ் சார்பில் சதீஷ்குமார், அமர்நாத் தயாரிக்க யுவராஜ் இயக்கும் படம் ‘எலி’.
தெனாலிராமன் படத்திற்குப் பிறகு இயக்குனர் யுவராஜ், வடிவேலு மீண்டும் இந்தப் படத்தின் மூலம் இணைந்திருக்கிறார்கள்.
வடிவேலு ஜோடியாக சதா நடிக்க, வில்லனாக பிரதீப் ராவத் நடிக்கிறார். வித்யாசாகர் இந்தப் படத்திற்கு இசையமைக்கிறார்.
விரைவில் படப்பிடிப்பு முடிய உள்ள இந்தப் படத்தை மே மாதம் மத்தியில் வெளியிட உள்ளார்கள்.
இந்தப் படத்தை 1960களில் நடக்கும் கதையாக அமைத்திருக்கிறார்கள். வடிவேலு கதாபாத்திரத்தை ‘எலி’ யின் குணாதிசயங்களை வைத்து உருவாக்கியிருக்கிறார்கள்.
இந்தப் படத்தைப் பற்றி இயக்குனர் யுவராஜ் நம்மிடம் பகிர்ந்து கொண்ட சில சுவாரசியமான விஷயங்கள்…
“1960ம் வருஷத்தோட பின்னணியில இந்தப் படம் நடக்குது. சென்னையில் ஒரு கடத்தல் கூட்டம் இருக்காங்க. அவங்களைப் பிடிக்கிறதுக்காக போலீஸ் உளவாளியான வடிவேலு அந்தக் கூட்டத்துக்குள்ளப் போறாரு, அதான் இந்தப் படத்தோட கதை.
வடிவேலு சார் இந்தப் படத்துல இலக்கியத் தமிழ்ல பேசாம சாதாரண தமிழ்ல பேசியிருக்கிறாரு. கடைசியா அவர் நடிச்ச மூணு படத்துல இலக்கியத் தமிழ்தான் பேசியிருந்தாரு. இந்தப் படத்துல அவர் பேசற நமக்குப் பிடிச்ச தமிழைதான் பேசியிருக்காரு.
1960கள்லதான் பேசும் போது ஆங்கிலக் கலப்பு ஆரம்பமாச்சி. அப்பலாம் ஒரு வாக்கியம் பேசினாங்கன்னா முதல் வார்த்தை ஆங்கிலத்துல இருக்கிறது கடைசி வார்த்தையும் ஆங்கிலத்துல இருக்கும். அப்படி ஒரு சில ஆங்கில வார்த்தைகளை வடிவேலு சார் அவருக்கே உரிய பாணியில பேசி நடிச்சிருக்காரு.
இந்தப் படத்துல காமெடிங்கிறது படம் முழுக்க, சிரிக்க வைக்கிற எண்ணத்தோட மட்டுமே இருக்கும்.
இந்தப் படத்துக்கு ஏன் ‘எலி’ன்னு பேர் வச்சம்னா, பொதுவா ஒரு நல்ல கும்பலுக்குள்ள கெட்டவன் ஒருத்தன் இருந்தான் அவனைத்தான் கருப்பு ஆடுன்னு சொல்வாங்க. ஆனால், ஒரு கொள்ளைக் கூட்டத்துல ஒரு நல்லவன் இருந்தான்னா, அவனை யாரும் கருப்பு ஆடுன்னு சொல்ல மாட்டாங்க. அவனை ‘எலி ஒண்ணு சிக்கிடுச்சிடா, வந்திருக்கு, அதைப் பிடிங்கடான்னு சொல்வாங்க. ‘ஸ்பை’ கேரக்டர்ல வடிவேலு சார் நடிக்கிறதால படத்துக்கு ‘எலி’ன்னு பேர் வச்சிருக்கோம்.
இந்தப் படம் பழைய படங்களை கிண்லடிக்கிற மாதிரியோ, ஸ்பூஃப் படம் மாதிரியோ எடுக்கலை. பழைய படங்கள்ல இருந்து கடத்தல்ங்கற விஷயத்தை மட்டும்தான் எடுத்திருக்கோம். அந்த காலத்துல நடந்த அரசியலையோ மத்த விஷயங்களையோ தொடவேயில்லை.
இந்தப் படத்துக்காக வடிவேலு சார் நிறையவே உழைச்சிருக்காரு. அவரோட நடை, பாவனை எல்லாத்தையுமே எலி எப்படி பண்ணுமோ அப்படியே அவரோட உருவத்துல கொண்டு வந்திருக்காரு.
அவருக்கும் சதாவுக்குமான காட்சிகள்ல கூட காதல் இருக்காது, அதுலயும் நகைச்சுவைதான் அதிகமா இருக்கும். சண்டைக் காட்சிகள்ல கூட சுவாரசியமும் நகைச்சுவையும் இருக்கும்.
1960ம் வருஷத்தை திரையில கொண்டு வர்றதுக்காக பல செட்டுகளை பிரம்மாண்டமா போட்டிருக்கோம். வெளியில போய் எங்கயுமே ஷுட் பண்ண முடியலை. 1960ம் வருஷத்தோட தோற்றத்தை வெளிப்புறப் படப்பிடிப்புகள்ல யதார்த்தமா கொண்டு வர முடியலை.
கோடை விடுமுறைக்கு படத்தைக் கொண்டு வர்ற திட்டத்துல இருக்கோம். அப்பதான் குழந்தைகளோட படத்தை வந்து குடும்பத்தோட வந்து ரசிக்க முடியும். விரைவில் அதற்கான அறிவிப்பு வெளிவரும்,” என்கிறார் யுவராஜ்.
‘எலி’ வந்து ‘கலகலகல’ன்னு சிரிக்க வைக்கட்டும்….