தெலுங்கில் மே 1ல் ‘காஞ்சனா 2’ வெளியீடு

தமிழில் கடந்த வாரம் வெளிவந்து மாபெரும் வெற்றிப் படமாக ‘காஞ்சனா 2’ படம் அமைந்துவிட்டது. தமிழ்நாட்டில் மட்டுமல்லாது கேரளா, கர்நாடகா போன்ற மற்ற மாநிலங்களிலும் இந்தப் படம் பலத்த வசூலை அள்ளி வருவதாகச் செய்திகள் தெரிவிக்கின்றன. நகைச்சுவை கலந்த த்ரில்லர் படமான இந்தப் படத்தை விடுமுறை தினம் என்பதால் தங்களது குழந்தைகளுடன் குடும்பத்தோடு வந்து பார்த்து வருவதாக தியேட்டர் வட்டாரங்களில் தெரிவிக்கிறார்கள்.

தெலுங்கிலும் இப்படம் கடந்த 17ம் தேதியன்றே வெளியாகும் என்று முதலில் எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், படத்தின் தெலுங்கு உரிமையை வாங்கிய பெல்லம்கொண்ட சுரேஷுக்கும், ஃபைனான்சியர்களுக்கும் இடையே உள்ள பிரச்சனையால் பட வெளியீடு தள்ளிப் போனது. அதன் பின் இந்த வாரம் 24ம் தேதியன்று வெளியாகும் என்று சொல்லப்பட்டது. ஆனால், அன்றும் படம் வெளிவராது, அதற்குப் பதிலாக மே 1ம் தேதி படத்தை வெளியிடலாம் என்று முடிவு செய்திருக்கிறார்களாம்.

தமிழில் இந்தப் படம் பிரம்மாண்டமானதொரு வெற்றியைப் பெற்றுள்ளதால் தெலுங்கிலும் அதே அளவிற்கு வரவேற்பு இருக்கும் என்று எதிர்பார்க்கிறார்கள். ஆனால், அன்றைய தினம் பாலகிருஷ்ணா நடித்துள்ள ‘லயன்’ படம் வெளியாக உள்ளது. அதனால், இரண்டு படங்களுக்கும் இடையே பலத்த போட்டி உருவாகும் நிலை ஏற்பட்டுள்ளது.

Read Previous

9th Annual Vijay Awards On April 25th…

Read Next

‘விந்தை’ – காவல் நிலையத்தில் காதல் ஜோடி