ஆஹா ஓஹோ புரொடக்ஷன்ஸ் சார்பில் ராம், சுபாஷ், தினேஷ், நானக் என நான்கு நண்பர்கள் இணைந்து தயாரித்துள்ள படம் ‘ஆரண்யம்’.
புதுமுகம் ராம், நீரஜா ஷாஜி, இளவரசு, சிங்கமுத்து,ஸ்ரீஹேமா மற்றும் பலர் நடித்துள்ள இந்தப் படத்தை குபேர்ஜி இயக்கியுள்ளார். எஸ்.ஆர். ராம் இசையமைப்பில் சாலை சகாதேவன் ஒளிப்பதிவு செய்துள்ளார்.
இந்தப் படத்தின் டிரைலர் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. விழாவில் இயக்குனர் குபேர்ஜி பேசியதாவது,
” நான் யாரிடமும் உதவியாளராகப் பணிபுரியவில்லை. படங்கள் பார்த்தும், பல விதமான சினிமா நண்பர்கள் மூலம் பழகிய அனுபவங்கள் பெற்றும் சினிமா கற்றவன்.
‘ஆரண்யம்’ படம் காடு சார்ந்த காதல் கதை, புதிய கதைக்களம், நிச்சயம் இப்படம் புதிய அனுபவமாக இருக்கும். நண்பர்களாக இணைந்து இப்படத்தை உருவாக்கியிருக்கிறோம். ‘காதலிக்க நேரமில்லை’ படத்தில் நாகேஷ் சொல்லும் ஆஹா ஓஹோ புரொடக்ஷன்ஸ் நினைவாக எங்கள் கம்பெனிக்கு அதையே பெயராக வைத்தோம்.
படக் கதை காதல் கதை தான், என்றாலும் இப்படம் உருவான விதம் பற்றி கேட்டால் அது எங்கள் நட்பின் கதையாக இருக்கும். என்மேல் நம்பிக்கை வைத்து இப்படத்தைக் கொடுத்தார்கள். சாலக்குடி காடு முதல் தாய்லாந்து காடுவரை போய் 60 நாட்களில் படத்தை முடித்து இருக்கிறோம். புதியதை என்றும் வரவேற்கும் ரசிகர்கள் இந்தப் படத்தை வரவேற்பார்கள் என்று நம்புகிறேன்,” என்றார் இயக்குனர்.
விழாவில் நாயகனும் தயாரிப்பாளர்களில் ஒருவரான ராம், நாயகி நீரஜா, நடிகர் ‘வழக்கு எண்’ ஸ்ரீ, தயாரிப்பாளர் சுபாஷ், பாடலாசிரியர்கள் பா.விஜய், மீனாட்சி சுந்தரம், ஒளிப்பதிவாளர் சாலை சகாதேவன் ஆகியோரும் கலந்து கொண்டு பேசினார்கள்.