யட்சன் – விஷ்ணு, ஆர்யா, யுவன் வெற்றிக் கூட்டணி

யு டிவி மோஷன்ஸ் பிக்சர்ஸ் மற்றும் விஷ்ணுவர்தன் பிலிம்ஸ் இணைந்து வழங்கும் படம் ‘யட்சன்’. இப்படத்தின் இசை வெளியீடு நேற்று நடைபெற்றது.

ஆர்யா, கிருஷ்ணா, தீபா சன்னதி, சுவாதி மற்றும் பலர் நடித்துள்ள இப்படத்தை விஷ்ணுவர்தன் இயக்க யுவன்ஷங்கர் ராஜா இசையமைத்துள்ளார். ‘யட்சன்’ என்றால் குபேரன், இயக்குபவன் என்று பொருள் என படத்தின் தலைப்புக்கான காரணத்தைச் சொல்கிறார் இயக்குனர் விஷ்ணுவர்தன்.

“ஆனந்த விகடன் வார இதழில் குறுநாவலாக வந்த ‘யட்சன்’ என்ற கதையைத்தான் சினிமாவாக எடுத்திருக்கிறோம். பட வெளியீட்டிற்கு முன் அந்த குறுநாவலையும், அது எப்படி திரைப்படமாக உருவானது என்பதையும் ஒரு புத்தமாக வெளியிட உள்ளோம்,” என்றார் யு டிவி தனஞ்செயன்.

நிகழ்ச்சியில் ஆர்யா, யுவன்ஷங்கர் ராஜா, கிருஷ்ணா, பா.விஜய் மற்றும் பலரும் பேசியதிலிருந்து,

ஆர்யா – “என்னை நடிக்க வைத்து யு டிவியில் சில படங்கள் எடுத்த போதும் தொடர்ந்து வாய்ப்பு தருகிறார்கள். எவ்வளவு அடித்தாலும் தாங்குகிறார்கள். விஷ்ணுவர்தனிடம் நான் கதை கேட்பதில்லை. அவர் சொல்ல ஆரம்பித்தால் ஆறேழு மணிநேரம் போகும். ஒரு சீனையே ஒரு மணி நேரம் வரை கூடச் சொல்வார்.

நான் இதுவரை 25 படங்களில் நடித்திருக்கிறேன். அவற்றில் 28 படங்கள் வரை யுவன்தான் இசையமைத்திருக்கிறார். அந்த அளவிற்கு எனக்கு எக்ஸ்ட்ராவாக இசையமைத்துக் கொடுப்பார். ‘தீப்பிடிக்க…’பாடலின் மூலம்தான், அட அந்தப் பாட்டில் வரும் பையன் என அடையாளம் கண்டு கொண்டார்கள். அதற்கு யுவன்தான் காரணம்.

‘சர்வம்’ படத்துக்கு பிறகு ‘யட்சன்’ படமும் பேசப்படும். இதில் கிருஷ்ணா புது கிருஷ்ணாவாக வருவார், கிருஷ்ணாவுடன் நடித்ததில் திருப்தி. அவரும் சிறப்பாக நடித்திருக்கிறார். பெங்களூரிலிருந்து வந்துள்ள தீபா சன்னதி அழகான நடிகை”.

இசையமைப்பாளர் யுவன்சங்கர் ராஜா – ”விஷ்ணுவர்தனின் படத்துக்கு மட்டும் யுவன் என்ன ஸ்பெஷலாக செய்திருக்கிறார் என்ன மேஜிக் செய்திருக்கிறார் என்கிறார்கள். விஷ்ணுவர்தனின் துறுதுறுப்பும் எனர்ஜியும் பழகினாலே நமக்கும் வந்து விடும். அவரை பள்ளி நாட்களிலிருந்தே எனக்குத் தெரியும். நல்லதோ கெட்டதோ முகத்துக்கு நேரே சொல்பவர்.”

கிருஷ்ணா – ”ஆர்யாவுடன் சேர்ந்து நடித்தது செம ஜாலியாக இருந்தது. என்னைப் பார்க்கிறவர்கள் எல்லாரும் ஏன் அண்ணன் இயக்கத்தில் நடிக்கவில்லை என்பார்கள், இனி அதைக் கேட்க மாட்டார்கள். என் முதல் இரண்டு படமும் தோல்வி அடைந்தபோது மிகவும் வருத்தப்பட்டேன். அப்போது அண்ணன் ‘நேரம் வரும்போது நாம் இணையலாம் ‘என்று கூறினார். என் படங்களுக்கு யுவனின் இசை அடையாள அட்டையாக இருந்து வெற்றி பெற்றுத் தந்துள்ளது. ‘கழுகு’ பட வெற்றிக்கு100 சதவிகித காரணம் யுவன் இசைதான்.”

பாடலாசிரியர் பா. விஜய் – “நானும் விஷ்ணுவர்தனும், யுவனும் இணையும் எட்டாவது படம் ‘யட்சன்’. எல்லாப் படங்களிலும் எல்லாப் பாடல்களையும் நானே எழுதியுள்ளேன். எங்கள் 3 பேரிடம் அப்படி ஒரு நட்பு, புரிதல் உள்ளது. இவர்களுக்கு எழுதும் போது மட்டும் பாடல் எழுதும் மனநிலையில் நான் போனதில்லை நண்பர்களைப் பார்ப்பது போல போவேன்.

இந்தப் படத்தின் மூலம் ஆர்யா என்கிற நண்பனின் நட்பு கிடைத்தது. ஆர்யாவை ஏன் எல்லாப் பெண்களும் கதாநாயகிகளும் விரும்புகிறார்கள் என்பது இதுவரை தெரியாமல் இருந்தது, இப்போது புரிகிறது. நட்புக்கு அவ்வளவு மரியாதை தருபவர். எளிமையாக, இனிமையாகப் பழகுபவர்.

இதுவரை மூவாயிரம் பாடல்கள் எழுதியிருக்கிறேன். நான் பிரஸ்மீட் வைத்து பாட்டெழுத மாட்டேன் என்று சொன்னதில்லை. நடிக்க வந்தபிறகு அப்படி பரப்பி விட்டார்கள். இப் படத்தின் பாடல்களும், ‘ படமும் பெரிய வெற்றியடையும்.”

நிகழ்ச்சியில் படத்தின் இயக்குனர் எழுத்தாளர்கள் சுபா, நடிகை தீபா சன்னதி, ஒளிப்பதிவாளர் ஓம்பிரகாஷ், தயாரிப்பாளர் யு டிவி ஜி.தனஞ்ஜெயன் ஆகியோரும் பேசினார்கள்.

ஆடியோ சிடியை எழுத்தாளர்கள் சுபா வெளியிட யுவன் சங்கர்ராஜா பெற்றுக் கொண்டார்.

Read Previous

Yatchan – Official Trailer

Read Next

When is Vikram’s next releasing ?