‘வாலு’ படம் பல பிரச்சனைகளைக் கடந்து வரும் 14ம் தேதியன்று உலகம் முழுவதும் வெளியாக உள்ளது.
‘வாலு’ படம் வெளியீடு பற்றி இன்று பத்திரிகையாளர்களைச் சந்தித்த டி.ராஜேந்தர் படம் வெளிவர உதவியாக இருந்த நடிகர் விஜய்க்கும், ஆதரவாக இருந்த மீடியாவுக்கும் நன்றி தெரிவித்தார்.
தொடர்ந்து பேசிய அவர், ‘நான் விஜய்யின் ரசிகன்’ என்று பெருமையாகக் கூறினார். அதோடு விஜய்யை தமிழன் என்பதால் மிகவும் பிடிக்கும் என்றார்.
“மலேசியாவில் ஒரு தொலைக்காட்சி நிகழ்ச்சிக்காக 10 நாட்கள் தங்கியிருந்த போது ஒரு நிகழ்ச்சியில் நானும் ஒரு நீதிபதியாக இருந்தேன். அதில் விஜயின் அம்மா ஷோபா சந்திரசேகரும் நீதிபதியாக இருந்தார்கள்.
அப்பொழுதே விஜயைப் பற்றிப் பெருமையாகப் பேசியிருந்தேன். தனது வீட்டில் ஒரு நடிகரை வைத்துக் கொண்டு விஜயைப் பெருமையாகப் பேசுகிறாரே என்று ஆச்சிரியப்பட்ட எஸ் ஏ சி குடும்பத்தினருடன் அடுத்த 10 நாட்கள் நெருங்கிப் பழகும் வாய்ப்பு கிடைத்தது.
விஜய் என்னுடைய ரசிகர் என்று பலமுறை சொல்லியிருக்கிறார். நான் அவருடைய ரசிகன், ‘புலி’ என்று பெயர் வைத்த விதத்தில் அவரை எனக்கு தமிழனாக மிகவும் பிடித்து விட்டது. எனக்கும் புலி பிடிக்கும்.
எனது மகன் தல ரசிகர், அதையெல்லாம் நினைக்காமல் சக நடிகனாக ‘வாலு’ பட வெளியீட்டிற்கு விஜய் எனக்கு தார்மீக ஆதரவு அளித்திருக்கிறார்.
இனிமேல் தொடர்ந்து படங்களை வெளியிடுவேன். ‘புலி’ படத்தினை வெளியிட பலர் இருக்கிறார்கள், இருந்தாலும் நானும் வெளியிட ஆவலாக இருக்கிறேன். அது மட்டுமல்லாமல், வேறு நடிகர்கள் நடித்த படங்களையும் சிம்பு சினி ஆர்ட்ஸ் வெளியிடும்,” என்றார் டி.ராஜேந்தர்.