தென்னிந்திய திரைப்பட நடிகர்கள் சங்கத்தின் தேர்தல் செப்டம்பர் 1ம் தேதி நடைபெற உள்ளது.
இந்தத் தேர்தலில் சரத்குமார் அணியை எதிர்த்து விஷால் அணியினர் போட்டி போட உள்ளனர். விஷால் அணிக்கு சீனியர் நடிகரான நாசர் பக்க பலமாக உள்ளார். அவருடைய தலைமையில் இளம் நடிகர்கள் ஒன்றாகச் சேர்ந்து சரத்குமார் அணியை பலமாக எதிர்த்து வருகிறார்கள்.
நடிகர் சங்கக் கட்டிட விவகாரம் தொடர்பாகத்தான் இரு அணியினரும் தேர்தல் களத்தைச் சந்திக்க உள்ளனர். கடந்த சில ஆண்டுகளாகவே நடிகர் சங்கம் இருந்த இடம் தரை மட்டமாக உள்ளது. அங்கு புதிய கட்டிடம் கட்ட முடியாமல் வழக்கு ஒன்று நிலுவையில் இருப்பதே காரணம் என சரத்குமார் அணியினர் தெரிவித்து வருகிறார்கள்.
ஆனால், தேர்தலில் வெற்றி பெற்று நடிகர் சங்கத்துக்கென பிரம்மாண்டமான கட்டிடம் கட்ட விஷால் குழுவினர் முனைப்புடன் செயல்பட்டு வருகிறார்கள்.
இந்த சூழ்நிலையில் இன்று காலையில் விஷால், நாசர், கார்த்தி, பொன்வண்ணன், கருணாஸ் உள்ளிட்ட விஷால் அணியினர் நடிகர்கள் ரஜினிகாந்த், கமல்ஹாசன் ஆகியோரைச் சந்தித்து தங்கள் அணிக்கு வாக்களிக்குமாறு ஆதரவு கேட்டனர்.
இதையடுத்து நடிகர் சங்கத் தேர்தல் விவகாரம் சூடு பிடித்துள்ளது.