இயக்குனர் சிகரம் கே.பாலசந்தர் நல்லாசியுடன் தொடங்கப்பட்ட ஸ்கெட்ச்புக் புரொட்க்ஷன்சின் முதல் படைப்பு ‘மய்யம்’.
பிரபல ஓவியக் கலைஞரான ஏ.பி.ஸ்ரீதர் தயாரிப்பில் ஆதித்ய பாஸ்கர் இயக்கத்தில், கே.ஆர். இசையமைப்பில் நவீன் சஞ்சய், ஜெய் குஹேனி, ரோபோ சங்கர் உள்ளிட்ட பலர் நடிக்கும் படம் ‘மய்யம்’.
இத்திரைப்படத்தின் ஒலிப்பேழை மற்றும் டிரைலரை கமல்ஹாசன் வெளியிட நடிகை கௌதமி பெற்றுக் கொண்டார்.
படத்தில் பணியாற்றிய நடிகர் மற்றும் தொழில் நுட்பக் கலைஞர்களுக்கு வாழ்த்துகளை தெரிவித்து கமல்ஹாசன் பேசியதாவது,
“எனக்கு இந்த ஆவி வந்த இடம் என்பதில் எல்லாம் நம்பிக்கை இல்லை, இப்ப ஆவி மார்க்கெட் ஜாஸ்தி இருந்தால் கூட.
ஆனால், இந்த இடத்தில்தான் ஒரு நாலு ‘டிகேடுக்கு’ முன்னாடி ஆர்.சி. சக்தி என்ற ஒரு இளைஞரும், கமல்ஹாசன் என்ற ஒரு இளைஞரும் பெயர் தெரியாத இரு இளைஞர்கள், இந்த இடத்தில்தான் ‘உணர்ச்சிகள்’ என்ற படத்தை ஆரம்பித்தோம்.
எங்களுக்கு ஷட்டிங்கிற்கு யாரும் இடம் கொடுக்க மாட்டார்கள். அந்த மாடியில்தான் ஷுட்டிங். இன்னும் சொல்லப் போனால் அந்த கதாநாயகன் வேடத்திற்கு ஆள் கிடைக்கவில்லை. வேறு வழியில்லாமல் கிடைத்த ஒரு நாயகன்தான் நான்.
அந்த ஃபோட்டோதான் எனக்கு திரு.பாலசந்தர் அவர்களிடம் வாய்ப்புப் பெறுவதற்கான ஃபோட்டோ ஷுட்டாக அமைந்தது. அந்த போட்டோவைப் பார்த்துட்டுதான் எனக்கு வாய்ப்பு கொடுத்தாரு.
இங்கிருந்து பல பேருக்கு முக்கியமான போட்டோ ஷுட்கள் நடந்திருக்கின்றன. இன்னொரு நண்பர் அந்த மாடியில, நல்லா சிகரெட் பிடிப்பாரு, அதை போட்டோ எடுத்தார்கள். அவர்தான் ‘மூன்று முடிச்சு’ படத்தில் நடித்த ரஜினி அவர்கள்.
என்னுடைய அரங்கேற்றத்திற்கான ஆயத்தங்கள் எல்லாம் இங்கேதான் நடந்தது. நல்ல இடம், நல்லது, கெட்டதெல்லாம் பலதும் பார்த்த இடம். பல இளைஞர்களை வளர்த்து விட்ட இடம். அங்கேதான் நீங்களும் வந்திருக்கிறீர்கள்.
இது என் இடம் என்பதனால் சொல்லவில்லை. இங்கே நடமாடியவர்கள் எல்லாம் இன்று பெரிய மனிதர்களாக இருக்கிறார்கள். இந்தத் திண்ணைகளில், இந்த இடங்களில் பாரதிராஜா, மணிரத்னம், நாங்கள் எல்லாரும், அரட்டை அடித்து, சண்டை போட்டு, ஒருவருக்கொருவர் மறுதலித்து பேசிய இடங்கள் இவை எல்லாம்.
அதே இடத்தில் இன்னொரு தலைமுறை தலையெடுப்பதைப் பார்ப்பதற்கப் பெருமையாக இருக்கிறது.
அதற்கும் இடம் கொடுக்கும், இந்த தமிழகத்திற்கும், தமிழ்த் திரைக்கும், உங்களைப் போலவே, எனது வணக்கங்கள். உங்களைப் போலவே இந்தப் படத்தின் வெற்றிக்காக ஆவலுடன் காத்திருக்கும் உங்களுடன் நான்,” என கமல்ஹாசன் வாழ்த்திப் பேசினார்.