‘லிங்கா’ பட விவகாரத்தால் அந்த நஷ்ட ஈட்டுத் தொகையைத் திருப்பித் தரும்படி சில தியேட்டர்காரர்கள் இப்போது மீண்டும் பிரச்சனையை ஆரம்பித்துள்ளார்கள்.
‘லிங்கா’ படத்தை தமிழகம் முழுவதும் வெளியிட்ட வேந்தர் மூவீஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் நாளை மறுநாள் ‘பாயும் புலி’ படம் வெளிவருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
ஆனால், படத்தை வெளியிட மாட்டோம் என சென்னையில் உள்ள ரோகிணி தியேட்டர் பன்னீர் செல்வம் தலைமையில் சில தியேட்டர்காரர்கள் தன்னிச்சையாக தடை விதித்தனர்.
அதை எதிர்த்து தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர் சங்கத்தினர் காவல் துறையிலும் புகார் அளித்தனர்.
இந்த நிலையில் சற்று முன்னர் பத்திரிகையாளர்களைச் சந்தித்த தயாரிப்பாளர் சங்கத்தினர் வரும் 4ம் தேதி முதலே எந்த ஒரு தமிழ்ப் படத்தையும் வெளியிட மாட்டோம் என அறிவித்துள்ளனர்.
இது தொடர்பாக அவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,
“செங்கல்பட்டு மாவட்டத்தைச் சேர்ந்த கோயம்பேடு ரோகிணி தியேட்டர் உரிமையாளர் பன்னீர் செல்வம் என்பவர் தன்னுடன் ஒரு தவறான கூட்டத்தை வைத்துக் கொண்டு, தொடர்ந்து தமிழ் சினிமாவை அழிக்கும் தீய சக்தியாக வேலை செய்து வருகிறார்.
இதன் தொடர்ச்சியாக ‘பாயும் புலி’ திரைப்படத்தை வெளியிடக் கூடாது என்று கட்டப் பஞ்சாயத்து செய்து வருகிறார். தங்களுக்கு ஒரு பெருந்தொகை தரவேண்டும் என்றும் அந்தத் தயாரிப்பாளரை மிரட்டி வருகிறார்.
இதனை கண்டிக்கும் வகையிலும், இதற்கு தீர்வு காணும் விதத்திலும் வரும் 04-09-2015 முதல் புதிய நேரடித் தமிழ்ப் படங்கள் மற்றும் மாற்று மொழிப் படங்களும் வெளியிடுவதில்லை என்றும், மேலும் 11-09-2015 முதல் அனைத்துத் திரைப்படங்களும் தமிழகம் முழுவதும் திரையிடுவதில்லை என்றும் முடிவு செய்யப்பட்டுள்ளது.
மேலும், இந்தப் பிரச்சனையில், தமிழக அரசு தலையிட்டு இது போன்ற தீய சக்திகளிடமிருந்து தமிழ்த் திரையுலகை மீட்டுத் தருமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறோம்,” எனத் தெரிவித்துள்ளனர்.