டாக்டர் சிவபாலன் தயாரிப்பில் ஆரோக்கியதாஸ் இயக்கத்தில் கே இசையமைப்பில் கவுண்டமணி மற்றும் பலர் நடித்துள்ள ‘49 ஓ’ திரைப்படத்தின் இசை வெளியீடு சென்னையில் நேற்று நடைபெற்றது.
சத்யராஜ், சிவகார்த்திகேயன் சிடியை வெளியிட கவுண்டமணி பெற்றுக் கொண்டார். விழாவில் பல திரையுலகப் பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.
நிகழ்ச்சியில் கவுண்டமணி பேசியதாவது,
“இந்தப் படத்தின் இயக்குநர் ஆரோக்கியதாஸ் என்கிட்ட வந்து கதை சொன்னார். நான் அவர்கிட்ட, ‘முன்னாடி விட்ருங்க. பின்னாடியும் விட்ருங்க. நடுவுல ரெண்டே ரெண்டு லைன்ல கதை சொல்லுங்க’ன்னு சொன்னேன். ‘ஆறடி தாய் மண்ணு’ன்னு சொன்னார். அதைக் கேட்டுட்டு நான் ஒத்துக்கிட்டேன்.
‘தயாரிப்பாளர் டாக்டர் சிவபாலன் கிட்ட ‘உங்களுக்குக் கதை பிடிச்சிருக்கா’ன்னு கேட்டேன். பிடிச்சிருக்கு, நிச்சயம் தயாரிப்பேன்னு சொன்னார். இப்போ எடுத்து முடிச்சிட்டார். இளம் இயக்குநர் ஆரோக்கியதாஸ், ரொம்ப முற்போக்கான வசனங்களையெல்லாம் எழுதியிருக்கிறார். அவருக்கும் ஒரு பாராட்டு தெரிவிக்கணும்..
இசையமைப்பாளர் கே.. அவர் பெயர் மாதிரியே கேக்குற மாதிரி மியூஸிக் போட்டிருக்காரு. பாடலாசிரியர் யுகபாரதி இந்த யுகத்துக்கு என்ன எழுதணுமோ அதை எழுதியிருக்காரு. அதை தேனிசை செல்லப்பா பாடியிருக்காரு. கேமிராமேன் கருப்பையா, பேருதான் கருப்பையா, ஆனால் படத்தை கலர்புல்லா எடுத்திருக்காரு.
இந்தப் படத்தோட கதையை யுகபாரதி இரண்டு வரிகளில் சொல்லியிருக்கார். ‘விவசாயம் இல்லைன்னா.. உலகம் ஏதுடா..? உயிர் ஏதுடா..? பல கட்டடங்கள் கட்ட வயல்காட்டை அழிச்சாங்க’ன்னு..” அருமையாக எழுதியிருக்கிறார்.
விவசாயமும், விவசாயிகளும் நம்ம நாட்டுக்கு அவசியம் தேவை. விவசாயி இல்லைன்னா நாம உயிர் வாழ முடியாது. நாம சாப்பிடுற சாப்பாட்டை யார் தர்றது ? விவசாயிகள் அழியக் கூடாதுன்ற புரட்சிகரமான கதையை எழுதியிருக்காங்க. ஆனால், அந்த விவசாயிக்கு அந்த நிலம்தான் மானம், புகழ், உயிர், பெயர், புகழ் எல்லாம். அந்த நிலத்தை விட்டுறக் கூடாது. அது கால் ஏக்கர், அரை ஏக்கர், முக்கால் ஏக்கரா இருந்தாலும் சரி.. அதுலதான் அவங்க வாழ்க்கை. அதுலதான் விவசாயம் பண்ணணும்.
ஒரு வருஷம் விளைச்சல் இல்லைன்னா அடுத்த வருஷம் விளையும். ‘நல்லா விளையலை, அதுனால நிலத்தை வித்துட்டேன்’னு சொல்லக் கூடாது.. ஒரு வியாபாரி, தன் வியாபாரத்துல நஷ்டமானாலும் அடுத்து வேற வியாபாரத்துல ஈடுபட்டு ஜெயிக்கிறான்ல அது மாதிரிதான்.
அந்த விவசாயிகளைத் தேடி யார், யாரெல்லாம் வர்றாங்க.. அரசியல்வாதிகள், ரியல் எஸ்டேட் ஓனர்கள், தொழிலதிபர்கள், கார்பரேட் கம்பெனிக்காரங்க, எதுக்கு வர்றாங்க, துக்கம் விசாரிக்கவா, இல்ல சந்தோஷம் கொண்டாடவா, அந்த நிலத்துல கால் ஏக்கரையாவது வாங்கிரலாம்னுதான்..
சில பேர் வித்துர்றாங்க. அந்த இடத்துல கட்டடம் கட்டிர்றாங்க. அப்புறம் விளை நிலம் எங்க இருக்கும் ? அப்புறம் எப்படி நாம சாப்பிடுறது ? அப்படியிருக்கக் கூடாது. ‘விவசாயிகள் விவசாயிகளாத்தான் இருக்கணும்’னு சொல்றதுதான் இந்த 49 ஓ திரைப்படம்.
இந்தத் திரைப்படம் விவசாயிகளைப் பத்தி சொல்ற கதை. நம்மூர் விவசாயிகளைப் பத்தி மட்டுமில்ல, எல்லா ஊர் விவசாயிகளைப் பத்தியும் சொல்ற கதை. இந்திய விவசாயிகளைப் பத்தி மட்டுமில்ல, அமெரிக்க விவசாயி, இங்கிலாந்து விவசாயி, ஆப்ரிக்க விவசாயியாக இருந்தாலும் சரி, விவசாயி விவசாயிதான்.
இதுல என்ன சேஞ்சு ? அமெரிக்கால ஜீன்ஸ் பேண்ட் போட்டு விவசாயம் பண்றான். நம்மூர்ல வேட்டி கட்டிட்டு விவசாயம் பண்றான். அதான் சேஞ்ச். அது நெல்லு விக்கிறவனா இருந்தாலும் சரி, கொள்ளு விக்கிறவனா இருந்தாலும் சரி, உலகத்துல எந்த மூலைல இருந்தாலும் சரி, ஒரு விவசாயியோட நிலத்தைக் காப்பாத்தணும். அப்பத்தான் மக்கள் வயிறார சாப்பிட முடியும். இதுதான் 49-ஓ திரைப்படம்.
பலதரப்பட்ட மக்கள் சொல்வாங்க, இது ஏ கிளாஸ் படம், இது பிளாஸ் படம்னு, ஆனா இந்த ‘49-ஓ’ திரைப்படம் ஏ,பி, சி, டி ல இருந்து இசட் வரைக்குமான அனைவருக்கும் பொதுவான திரைப்படம். இது கிராமத்துக்கும் பிடிக்கும், சிட்டிக்கும் பிடிக்கும். அப்படிப்பட்ட படம்தான்.
‘49-ஓ’-ன்னா என்ன ? நோட்டோன்னா என்ன ? நாம யாருக்கு ஓட்டுப் போடணும் ? ஏன் போடணும் ? எதுக்குப் போடணும்? ஓட்டுப் போடறதால நமக்கு என்ன நன்மை? இல்ல போடலாமா ? வேண்டாமா ? இதுக்கெல்லாம் இந்தப் படத்துல அருமையான விளக்கத்தைக் கொடுத்திருக்கேன். இதுதான் 49 ஓ. 49-ஓ, திஸ் இஸ் பெஸ்ட் மூவி. இதுவொரு நல்ல படம். இது எல்லாரும் அவசியம் பார்க்க வேண்டிய படம்.
நான் மறுக்கா மறுக்கா சொல்றேன், மவுண்ட்ரோடு தர்க்காவுல வேணும்னாலும் வந்து சொல்றேன், ‘49-ஓ’ படத்தைப் பத்தி மட்டுமே சொல்றேன். திஸ் இஸ் பெஸ்ட் மூவி. இதுவொரு நல்ல படம். இந்தப் படத்தை தயவு செய்து யாரும் மிஸ் பண்ணிடாதீங்க. நீங்க பேமிலியோட அவசியம் பார்க்கணும்.
ஏன்னா அனைத்து அம்சங்களும் கொண்ட படம் இது. இதுவொரு மினி மீல்ஸ் மாதிரியான படம். ஹோட்டலுக்கு போயி மினி மீல்ஸ் சாப்பிட்டீங்கன்னா புளி சாதம், தயிர் சாதம், சாம்பார் சாதம், ரசம் சாதம், அப்பளம், கூட்டு, பொரியல், ஸ்வீட், காரம், பாயாசம்ன்னு இது அத்தனையும் சாப்பிட்டால் என்ன டேஸ்ட் வருமோ, அது இந்த ‘49-ஓ’ படத்துல இருக்கு.
‘49-ஓ’ திஸ் இஸ் பெஸ்ட் மூவி. எல்லாரும் மிஸ் பண்ணாம பாருங்க, வந்த எல்லாருக்கும் நன்றி,” என கலகலப்பாகவும், அதே சமயம் விவசாயத்திற்கு ஆதரவாகவும் பேசி கைதட்டலை வாங்கினார் கவுண்டமணி.