90களில் அனைத்து முன்னணி நடிகர்களுடனும் நடித்து ஒரு கலக்கு கலக்கிய குஷ்புவுக்கு நமது ரசிகர்கள் கோயில் வரை கட்டினார்கள். அதோடு விடாமல் நாம் அனைவரும் விரும்பி சாப்பிடும் ‘இட்லி’ யில் ஒரு வகையைக் கண்டுபிடித்து அதற்கு ‘குஷ்பு இட்லி’ என்று பெயரிட்டு அதை நிரந்தர உணவுப் பட்டியலில் சேர்த்து விட்டார்கள்.
இதோ, அடுத்து ஒரு நடிகைக்கு ‘இட்லி’ என பெயர் வைத்துவிட்டார்கள் அந்தப் படத்தின் குழுவினர். அடுத்த வாரம் திரைக்கு வர உள்ள ‘கிருமி’ படத்தின் நாயகியான ரேஷ்மியைத்தின் படத்தின் இயக்குனர், ஒளிப்பதிவாளர், நாயகன் அனைவரும் படப்பிடிப்பு சமயத்தில் ‘இட்லி’ என்று அழைப்பார்களாம். அதை நாயகியே நேற்று நடந்த பத்திரிகையாளர் சந்திப்பில் பெருமையாகச் சொன்னார்.
இந்த ரேஷ்மி மேனன் வேறு யாருமல்ல, சமீப காலமாக நடிகர் பாபி சிம்ஹாவுடன் காதல் கிசுகிசுவில் சிக்கியவர்தான்.
“இந்தப் படத்துக்காக டைரக்டர் அனுசரணை முதன் முதலா போய் பார்த்த போது படத்தோட டைட்டிலை ‘கிருமி’ன்னு சொன்னதும் எனக்கு குழப்பமா இருந்தது. இந்தப் படம் எதைப் பத்தின்னு கேள்வி எழுந்தது. அதுக்கப்புறம் என்னோட கேரக்டரைப் பத்தி சொன்னாரு.
எனக்கு இந்தக் கதாபாத்திரம் பொருத்தமா இருக்குமான்னு ஒரு சந்தேகம் இருந்தது. ஏன்னா இதுக்கு முன்னாடி இப்படி ஒரு கதாபாத்திரம் நான் பண்ணதில்லை. எனக்குப் பொருத்தமா இருக்குமான்னு யோசிச்சேன். ஆனால், இந்த டீம் எனக்குக் கொடுத்த நம்பிக்கையில் இன்னைக்கு படத்தை வெற்றிகரமா முடிச்சிருக்கோம். இந்தப் படத்துல நடிச்சது பெருமையா இருக்கு.
இந்த டீம்ல எல்லாரும் என்னை ‘இட்லி’ன்னுதான் கூப்பிடுவாங்க. ஒளிப்பதிவாளர், டைரக்டர், ஹீரோ எல்லாரும் ‘இட்லி ஷாட் ரெடி வா’ன்னுதான் கூப்பிடுவாங்க. ரொம்ப ஜாலியா ஷுட் பண்ணோம், ஆனால் இது ஒரு சீரியஸான படம்.
இப்படி ஒரு நல்ல படம் உருவாகறதுக்கு தயாரிப்பாளர்கள் ரொம்பவே சப்போர்ட் பண்ணாங்க. இப்ப படத்தைப் பார்த்துட்டு எஸ்கேட் ஆர்ட்டிஸ்ட் இந்த மாதிரி ஒரு சின்ன படத்தை சப்போர்ட் பண்ணி ரீலீஸ் பண்றாங்க, அவங்களுக்கும் நன்றி,” என்றார் ரேஷ்மி.
‘கிருமி’ அடுத்த வாரம் 24ம் தேதி உலகம் முழுவதும் வெளியாக உள்ளது.