தமிழ்த் திரையுலகத்தில் தற்போது நடக்கும் பத்திரிகையாளர் சந்திப்புகள், திரைப்பட விழாக்கள் ஆகியவற்றிற்கு தயாரிப்பாளர்கள் சங்கம் கட்டுப்பாடு விதித்துள்ளது. ஒரு சில தொலைக்காட்சிகளைத் தவிர மற்ற தொலைக்காட்சிகள் சினிமா நிகழ்ச்சிகளுக்கு வருவதில்லை.
ஆனால், இன்று சரத்குமார் அணி சார்பாக நடைபெற்ற ஒரு முக்கிய பத்திரிகையாளர் சந்திப்பில் தான் பேசும் போது கை தட்டுவதற்காக தன்னுடைய ரசிகர்களை சிம்பு வரவழைத்திருந்தார். சிம்பு பேசப் பேச அவர்கள் தொடர்ந்து கை தட்டிக் கொண்டேயிருந்தனர்.
நிகழ்ச்சிக்கு செய்தி சேகரிக்க வந்திருந்த பத்திரிகையாளர்களுக் அது மிகவும் இடைஞ்சலாக இருந்தது. இத்தனைக்கும் பத்திரிகையாளர் சந்திப்பு ஒரு நட்சத்திர ஓட்டலில் நடைபெற்றது. திடீரென ஏற்பாடு செய்யப்பட்ட இந்த சந்திப்பிற்கே அதற்குள் தன் ரசிகர்களுக்குத் தகவல் தெரிவித்து கூட்டத்தைச் சேர்த்துவிட்டார் சிம்பு.
அப்போது ஒரு பத்திரிகையாளர் கேட்ட கேள்வியை, சிம்பு நக்கலடிக்க, அதற்கு சிம்புவால் வரவழைக்கப்பட்ட ரசிகர்கள் கைதட்டினார்கள். இதனால் ஆவேசமடைந்த பத்திரிகையாளர்கள் சிம்புவுடன் நேருக்கு நேர் சண்டைக்குப் போனார்கள்.
அவர்களின் எதிர்ப்பைக் கண்டு மிரண்டு போன சிம்பு, அதற்கு நேரடியாக பதில் சொல்லாமல் தான் சொல்ல வந்ததையே சொல்ல முயற்சித்துக் கொண்டிருந்தார்.
பத்திரிகையாளர்கள் சந்திப்பு எனக் கூறிவிட்டு, ரசிகர்களை ஏன் அழைத்தீர்கள் என பல பத்திரிகையாளர்கள் சிம்புவிடமும் ராதிகாவிடமும் கோபப்பட்டனர். அதற்கு பதிலளித்த ராதிகா இது ஹோட்டல் யார் வேண்டுமானாலும் வருவார்கள் போவர்கள் என்றார். பத்திரிகையாளர்கள் சந்திப்புக்கு ரசிகர்கள் எப்படி வருவார்கள் என்பது கூடவா ராதிகாவுக்குத் தெரியாது ?.
பத்திரிகையாளர்களை மட்டும் அழைத்த ஒரு நிகழ்ச்சிக்கு ரசிகர்களை வரவழைத்து சிம்பு கைதட்ட வைத்ததன் நோக்கம் என்ன ?. நடிகர் சங்கத் தேர்தல் பிரச்சனையில் கூட சுய விளம்பரத்தைத் தேடிக் கொள்ள முயலும் சிம்புவை, இந்த நிகழ்வுக்கு சரத்குமார் அணியினர் அழைத்திருக்கவே கூடாது என பத்திரிகையாளர்கள் திட்டிக் கொண்டே சென்றனர்.
கை தட்டுவதற்காகவே ரசிகர்களை ஏற்பாடு செய்து வரவழைத்த சிம்பு, பேசிய பேச்சு எப்படி இருந்திருக்கும்…எதிர் அணியினரை மிகவும் கேவலமாகவும் மரியாதை இல்லாமலும் வாய்க்கு வந்ததை நாகரீகம் இல்லாமல் பேசிக் கொண்டேயிருந்தார்.