மாணவர்கள் உருவாக்கிய ‘மய்யம்’ 16ம் தேதி ரிலீஸ்

ஹார்வெஸ்ட் எண்டர்டெயினர்ஸ் மற்றும் ஸ்கெட்ச் புக் ப்ரொடக்சசஸ் தயாரித்துள்ள இப்படத்தில் 27 அறிமுக கலைஞர்கள் பணியாற்றியுள்ளனர், அதில் 12 பேர் தற்போது பயின்று கொண்டிருக்கும் கல்லூரி மாணவர்கள் என்பது முக்கிய அம்சமாகும்.

“உயிர்வாழப் பணம் தேவைதான்…பல உயிர்கள் பறிபோவதே அதனால் தான்.வேண்டும் போதெல்லாம் பணம் எடுக்க வசதி செய்து கொடுத்த வங்கிகள் மனிதனின் பாதுகாப்பை பலப்படுத்தியதா? பதிவு செய்யத்தெரிந்த கேமிராவுக்குப் பாதுகாக்கத் தெரியுமா? எனவே திரும்பப் பெறமுடியாத உயிர்களை மதிப்போம் !,” என்ற இந்தக் கருத்தை கதைகருவாக அமைத்து விரைவில் வெளிவரவிருக்கும் படமே ‘மய்யம்’.

“சினிமாவில் வாய்ப்புத் தேடி பல வருடங்கள் அலைந்திருக்கிறேன். ஏழு வருடம் அலைந்த பிறகுதான் டிசைனரா ஆனேன். பல படங்களில் டிசைனராகப் பணிபுரிந்திருக்கிறேன். அப்போதெல்லாம் டிசைனர் பெயர்களை டைட்டிலில் போட மாட்டார்கள். என் பேர் வராத சமயத்துல, படம் தயாரிக்கும் வாய்ப்பு எனக்குக் கிடைத்தால், பல புதிய கலைஞைர்களை அறிமுகப்படுத்த வேண்டும் என்று ஆசைப்பட்டேன்.

அதனால்தான் இந்தப் படத்தில் 27 கலைஞர்களை அறிமுகப்படுத்துகிறேன். அவர்களை அறிமுகப்படுத்துவதில் நான் பெருமைப்படுகிறேன். அவர்கள் மிகச் சிறந்த படத்தைக் கொடுத்திருப்பார்கள் என்று நினைக்க வேண்டாம். கண்டிப்பாக நல்ல படத்தைக் கொடுப்பார்கள் என்று நம்பித்தான் இந்தப் படத்தை அவர்களிடம் கொடுத்தேன். அவர்களுக்கு என்ன தேவையோ அதை செய்து கொடுத்தேன். அடுத்தடுத்த படங்களில் அவர்கள் இன்னும் உயரத்தைத் தொடுவார்கள்.

ஷுட்டிங்கே பார்க்காதவர்கள் கிட்ட ஒரு வாய்ப்பைக் கொடுத்திருக்கிறேன். அவர்கள் பார்த்த முதல் ஷுட்டிங்கே அவங்களுடைய படம்தான். ஒரு ஃபயர் இருக்கிற மாணவர்கள்கிட்ட வாய்ப்பைக் கொடுத்தால் பட உருவாக்கத்தைக் கொடுத்தால் என்னங்கற கேள்விதான் இந்தப் படம்,” என மாணவர்கள் மீது வைத்த நம்பிக்கையை தன் பேச்சிலும் வெளிப்படுத்துகிறார் தயாரிப்பாளர் ஏ.பி.ஸ்ரீதர்.

நமக்கு தேவைப்படும் பணத்தை நினைத்த நேரத்தில் எடுக்க உதவும் ATM மய்யத்தில், சில நேரங்களில் ஏற்படும் கொலை, கொள்ளை போன்ற அசம்பாவிதங்கள் மனிதனுக்கு எவ்வாறு ஆபத்தாகிறது என்பதை சமுக அக்கறையுடன் கூறியுள்ளனர் மய்யம் குழுவினர்.

Against ATM Murder என்ற தலைப்பிற்காக பிரத்யேகமாக உருவாக்கப்பட்ட ஒவியத்தில் உலகநாயகன் கமல்ஹாசன் மற்றும் நடிகை கவுதமி அவர்கள் கையொப்பமிட்டு மய்யம் படக்குழுவினரின் முயற்சிக்கு பாராட்டு தெரிவித்தனர்.

மிகவும் தேவையான ஒரு கருத்தை மக்களுக்குச் சொல்லும் இந்த ‘மய்யம்’ திரைப்படம் அக்டோபர் 16ம் தேதியன்று திரைக்கு வருகிறது.

Read Previous

‘வேதாளம்‘ டீசர் – 16 மணி நேரத்தில் 10 லட்சம் ஹிட்ஸ்

Read Next

‘10 எண்றதுக்குள்ள’ படத்திற்கு ‘யு’ சான்றிதழ்