பிரின்ஸ் பிக்சர்ஸ் தயாரிப்பில் ரஜத் ரவிசங்கர் இயக்கத்தில் கார்த்தி, ரகுல் ப்ரீத் சிங் மற்றும் பலர் நடிக்கும் படம் ‘தேவ்’.
இப்படத்தின் முதல் பார்வையை நேற்று நடிகர் சூர்யா வெளியிட்டார்.
‘தேவ்’ படம் பற்றி இயக்குனர் ரஜத் ரவிசங்கர் கூறியதாவது,
“கார்த்தியின் ‘தேவ்’ கதாபாத்திரத்தின் தோற்றம், காட்சியமைப்புகள் இவற்றைப் பார்த்த மாத்திரத்திரத்திலேயே அனைவரையும் காதலில் விழ வைக்கும் என்பதில் ஐயமில்லை.
காதல், ரொமான்ஸ் மட்டுமல்லாமல், ஒரு இளைஞன் தான் நினைப்பதை சாதிப்பதற்கு எந்த மாதிரியான சவால்களை எதிர்த்துப் போராடுகிறான் என்பதே கார்த்தியின் கதாபாத்திரம். இதற்கிடையில் தற்போதுள்ள இளைஞர்களுக்கு இருக்கும் சந்தோஷத்தையும் அனுபவிக்கிறார்.
ராமலிங்கம் என்ற தன் பெயரோடு தன்னுடைய அபிமான கிரிக்கெட் வீரர் கபில்தேவ் பெயரை சேர்த்து தேவ் ராமலிங்கம் என்று மாற்றிக் கொள்கிறார். சுருக்கமாக தன் பெயரை ‘தேவ்’ என்று மாற்றிக் கொள்கிறார் கார்த்தி.
கதாநாயகியாக ரகுல் ப்ரீத் சிங் நடிக்கிறார். பெயருக்கு கதாநாயகி என்றில்லாமல் கார்த்திக்கிற்கு இணையாக முக்கியத்துவம் இவருக்கு இருக்கும். பல காட்சிகளில் தனது அபாரமான நடிப்பாற்றலை வெளிப்படுத்தியிருக்கிறார் ரகுல் ப்ரீத் சிங். அந்த காட்சிகளில் எல்லாம் அனைவரின் பாராட்டையும் பெறுவார்.
மேலும் இப்படத்தில் கார்த்தியின் அப்பாவாக பிரகாஷ்ராஜ், ரகுல் ப்ரீத் சிங் அம்மாவாக ரம்யா கிருஷ்ணனும் நடிக்கின்றனர். இவர்கள் தவிர, விக்னேஷ், அம்ருதா, வம்சி மற்றும் பலர் நடிக்கின்றனர்.
இவர்களுடன் கார்த்திக் மற்றும் நிக்கி கல்ராணி இருவரும் சிறப்பு தோற்றத்தில் நடிக்கின்றனர்.
இப்படத்தின் கதையை இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜிடம் கூறி முடித்ததுமே என்னை கட்டியணைத்துக் கொண்டார். இப்படத்தில் என்னுடைய பங்கு நிச்சயம் இருக்கும் என்றார்.
5 பாடல்களைக் கொண்ட ‘தேவ்’ படம் இசைக்கு விருந்தளிக்கும் விதமாகவும் இருக்கும். அதன்பின் ஒளிப்பதிவாளர் வேல்ராஜிடம் கூறியபோது அவரும் ஒப்புக் கொண்டார். இவர் சமீபத்தில் வெளியான கார்த்தியின் ‘கடைக்குட்டி சிங்கம்’ படத்திலும் ஒளிப்பதிவாளராக பணியாற்றியிருக்கிறார். காட்சிக்கேற்ப கார்த்தியை வித்தியாசமாகவும், ரசிக்கும்படியாகவும் நேர்த்தியாக ஒளிப்பதிவு செய்வதில் வல்லவர். வேல்ராஜுக்கு கார்த்தியுடன் இணைந்து பணியாற்றுவது இது மூன்றாவது படம் என்பது குறிப்பிடத்தக்கது,” என்கிறார் இயக்குனர் ரஜத்.
இப்படத்தின் முதல் தோற்றத்தைப் பார்க்கும் போதே, நாடெங்கிலும் மூலை முடுக்கிலும் ‘தேவ்’ ஒரு தாக்கத்தை ஏற்படுத்தும் என்று நடிகர் சூர்யா தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
ப்ரின்ஸ் பிக்சர்ஸ்-ன் லக்ஷ்மண் இப்படத்தைத் தயாரிக்கிறார். இப்படத்தின் டீஸர், இசை வெளியீடு விரைவில் நடைபெ உள்ளது.