ஃபரா சரா பிலிம்ஸ் தயாரிப்பில் எஸ். பரித் கதை, திரைக்கதை, வசனம், எழுதி தயாரித்து இயக்கியுள்ள படம் ‘வீரையன்’.
எ.என்.அருணகிரி இசையமைப்பில் இனிகோ பிரபாகர், சைனி, கயல் வின்சென்ட், தென்னவன், வேலா ராமமூர்த்தி, ‘ஆரண்ய காண்டம்’ வசந்த், ஹேமா, திருநங்கை பிரித்தீஷா, யூகித் மற்றும் பலர் நடித்துள்ளார்கள்.
இப்படத்தின் இயக்குனர் எஸ்.பரித் கலைமணியிடம் உதவியாளராகவும், ‘கதிர்வேல்’ படத்தில் இணை இயக்குனராகவும், ‘களவாணி’ படத்தில் நிர்வாகத் தயாரிப்பாளராகவும் பணிபுரிந்துள்ளார்.
படம் பற்றி பரித் கூறியதாவது,
“அப்பா, பையனோட கதை தான் இது. குடும்பத்துக்குள்ளேயே ஒருவர் மீது மற்றொருவருக்கு நம்பிக்கை இருக்கும். அப்பா, நம்மைக் காப்பாற்றுவார் என்று மகன்களுக்கும், கணவர் நம்மைக் காப்பாற்றுவார் என்று மனைவிக்கும், மகன் நம்மைக் காப்பாற்றுவான் என்று அப்பாவுக்கும் நம்பிக்கை இருக்கும். அப்படி ஒருவர் மீது மற்றொருவர் வைத்த நம்பிக்கைதான் இந்தப் படம்.
மகன் மீது நம்பிக்கை வைத்திருக்கும் அப்பாவுக்கும், அப்பா வைத்த நம்பிக்கையை மகன் காப்பாற்றுவானா என்பதற்குரிய போராட்டம்தான் இந்தப் படத்தின் கதை. மகனாக இனிகோ பிரபாகரும், அப்பாவாக தென்னவனும் நடித்துள்ளார்கள்.
இனிகோ பிரபாகரின் நட்பு வட்டத்தில் உள்ளவர்களாக ‘கயல்’ படத்தில் நடித்த வின்சென்ட்டும், திருநங்கை பிரித்தீஷாவும் படம் முழுவதும் வரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். வேலா ராமமூர்த்தியும் முக்கிய கதாபாத்திரம் ஒன்றில் நடித்துள்ளார்.
சோழ மன்னர்கள் வாழ்ந்த உயர்ந்த பூமியான தஞ்சை மண்ணானது கால ஓட்டத்தில் தடம் புரண்டு இப்போது மக்களின் பயன்பாட்டில் எவ்வாறு இருக்கிறது என்பதனை 1990ம் ஆண்டின் பின்புலமாகக் கொண்டு கதை இந்தப் படத்தின் கதை அமைக்கப்பட்டிருக்கிறது.
இனிகோ பிரபாகர், கயல் வின்சென்ட், பிரீத்திஷா கேவலமான குணம் கொண்டவர்கள். ஒன்று இவர்கள் மற்றவர்களிடம் அடி வாங்குவார்கள், அல்லது மற்றவர்களை அடித்துக் கொண்டிருப்பார்கள், இந்த சமூகமும் இவர்களைப் பற்றிக் கேவலமாகவே பேசும். இப்படிப்பட்டவர்கள் படத்தின் நாயகனான இனிகோ பிரபாகரின் அப்பா வைத்துள்ள நம்பிக்கையை எப்படிக் காப்பாற்றுவார்கள் என்பதைத்தான் யதார்த்தமாகச் சொல்லியிருக்கிறோம்.
நான் தஞ்சை மாவட்டத்தில் பிறந்து வளர்ந்தவன். சிறு வயதிலிருந்தே சோழ மன்னர்கள் வாழ்ந்த பூமி நம் பூமி என்ற ஒரு வியப்பு எனக்குள் இருந்தது. பள்ளி படிக்கும் நாட்களில் இருந்தே அது என்னிடம் இருந்தது. தஞ்சை மாவட்டத்தில் காவிரிக் கரையோரமாக இந்தப் படத்தை முழுமையாக எடுத்திருக்கிறோம்.
‘பொன்னியின் செல்வன்’ படத்தில் வந்தியத் தேவன் பயணித்த அந்தக் காவிரிக் கரையோரத்தை சரித்திரப் பின்னணிக் கொண்ட ஒரு பதிவாக அழுத்தமாகச் சொல்லியிருக்கிறேன். என்னுடைய மண்ணின் பெருமையைச் சொல்லும் படமாக இந்தப் படம் இருக்கும்,” என்கிறார் இயக்குனர் பரித்.