‘சூப்பர் ஸ்டார்’ பட்டம் பற்றி மனம் திறந்த மோகன்லால்

இயற்கைக்கு முன் மனிதர்கள் எல்லாம் ஒன்றுமில்லை என்பதை சென்னையில் ஏற்பட்ட பெரு மழையும், பெரு வெள்ளமும் மனிதர்களுக்கு உணர்த்தியது.

இயற்கையை நாம் ஆராதித்தால் மட்டுமே நாமும் நலமாக வாழ முடியும் என்பதை பலர் தெரிந்து கொண்டார்கள்.

பலரையும் இந்த மழையும் வெள்ளமும் மாற்றிவிட்டது என்றே சொல்ல வேண்டும். சென்னை மக்களிடையே மனித நேயமும், அடுத்தவர்களுக்கு உதவ வேண்டும் என்ற எண்ணமும் யாரும் சொல்லாமலும் தாமாகவே வந்தது.

அந்த வெள்ளத்தில் தன் வீட்டில் சிக்கிக் கொண்ட மலையாள சூப்பர்ஸ்டார் மோகன்லால் சென்னை வெள்ளம் பற்றி தன்னுடைய பிளாக்கில் கேரள மக்களுக்கு ஒரு கடிதமாக எழுதியிருக்கிறார். அதில் ‘நானும் சாதாரணமானவன்தான் என்பதை அந்த வெள்ளம் உணர்த்தியது,’‘ என்று தெரிவித்துள்ளார்.

“மலையாளிகள் என்னை அன்பாக ‘சூப்பர் ஸ்டார்’ என்று அழைப்பார்கள். சூப்பரான ஹீரோயிசமான எத்தனையோ காட்சிகளில் நான் நடித்திருக்கிறேன். அதற்காக பல விருதுகளையும் பெற்றுள்ளேன். மக்களும் என்னை பெரிய ஆள் என எண்ணிக் கொண்டுள்ளார்கள்.

ஆனால், பல திசைகளிலிருந்து தண்ணீர் வருவதைப் பார்த்துக் கொண்டு, எதுவும் செய்ய முடியாமல் ஒரு வாரம் தவித்த போதுதான் நானும் சாதாரணமான ஆள் என்பதை உணர முடிந்தது,” என்று நெகிழ்ச்சியுடன் எழுதியுள்ளார்.

திரையில் சாகசம் செய்த தன்னால் வெள்ளத்தில் ஒன்று செய்ய முடியாமல் தவித்ததைப் பற்றி மனம் திறந்து எழுதியுள்ளார்.

சென்னை வெள்ளத்தில் தங்களின் உயிரைப் பற்றியும் பொருட்படுத்தாமல் எத்தனையோ உயிர்களைக் காப்பாற்றியவர்களும், மற்றவர்களைக் காப்பாற்றி தங்கள் உயிரை இழந்தவர்களும்தான் உண்மையான சூப்பர் ஸ்டார்கள் என்பதை நாம் உணர வேண்டிய காலம் இது.

Read Previous

Kathakali – Official Trailer

Read Next

காதல் காலம் – பாக்யராஜுக்கு மகிழ்ச்சி தந்த தயாரிப்பாளர்