‘அரண்மனை 2’ அனுபவங்கள் – சுந்தர் .சி பேட்டி

20 வருடங்களுக்கும் மேலாக தமிழ்த் திரையுலகில் தனக்கென ஒரு தனி ரசிகர் வட்டத்தை வைத்திருப்பவர்களில் இயக்குனர் சுந்தர் .சி முக்கியமானவர்.

நகைச்சுவைப் படங்கள் என்றாலே சுந்தர் .சி என்ற பெயர் தமிழ்த் திரையுலகில் நீண்ட காலமாக இருந்து வருகிறது. பேய் படத்தைக் கூட சிரிக்க வைக்கும் படமாகவும் எடுக்க முடியும் என்று ‘அரண்மனை’ படத்தில் நிரூபித்தவர்.

தற்போது ‘அரண்மனை 2’ படம் மூலமாக மீண்டும் ஆட்சி செய்ய வருகிறார். படம் பற்றியும், அவரது அனுபவங்களைப் பற்றியும் அவர் கூறியதிலிருந்து….

‘அரண்மனை’ இரண்டாம் பாகம் எடுக்கும் எண்ணம் எப்படி வந்தது ?

“உண்மையிலேயே எந்த பிளானும் இல்லாமல்தான் இருந்தேன். ‘அரண்மனை’யில் பேய் படத்தின் மூடை ஆடியன்ஸ் கடைசி வரை ஃபீல் பண்ணவேண்டும் என்பதற்காக க்ளைமாக்ஸில் ஜன்னலில் பேய் வந்து நிற்பதுபோல் ஒரு சீன் வைத்திருப்பேன். அந்த சீனை பார்த்துட்டு செகண்ட் பார்ட் எப்ப எடுக்கப்போறீங்கன்னு எல்லோரும் கேட்க ஆரம்பிச்சிட்டாங்க.

வீட்டில் என் குழந்தைகளும் ‘எப்ப டாடி செகண்ட் பார்ட்?’ன்னு கேட்டாங்க. அப்போதான் செகண்ட் பார்ட் ஸ்கிரிப்ட்டுக்கும் பொறி தட்டியது. அதை டெவலப் பண்ண ‘அரண்மனை 2’ ஸ்டார்ட் ஆகிடுச்சு.”

ஹன்சிகாவை மட்டும் இரண்டாவது பாகத்துல ஹீரோயினா நடிக்க வச்சிருக்கீங்களே ?

“கதை ரெடியானதும் முதல் போன் ஹன்சிகாவுக்குதான் அடிச்சேன். விஷயத்தைக் கேட்டுட்டு இந்த படத்திலும் கண்டிப்பா நான் இருப்பேன்னு நான் கேட்கறதுக்கு முன்னாடியே முந்திகிட்டு கால்ஷீட் புக் பண்ணிட்டாங்க. பார்ட் ஒன்னைவிட இரண்டு செம சூப்பரா வந்திருக்கு. சொல்லமுடியாது ‘அரண்மனை 3’கூட வர வாய்ப்பிருக்கிறது”

சித்தார்த், த்ரிஷா கேரக்டர் எப்படி அமைஞ்சிருக்கு?

“ம் சூப்பர். சித்தார்த் இந்த படத்துக்குள் வந்ததே எதேச்சையாகதான் நடந்தது. ஒருநாள் பேசிட்டு இருந்தபோது செகண்ட் பார்ட் ஐடியாவை சொன்னேன். உடனே நான் பண்றேன் சார்னு ரெடியாகிட்டார். முன்னணி ஹீரோக்கள் நடிக்கத் தயங்கற அளவுக்கான ஒரு கேரக்டர்தான். ஆனா ரொம்ப ஈடுபாட்டுடன் நடிச்சு கொடுத்திருக்கார். அதேமாதிரி த்ரிஷா. ரெண்டு பேருக்குமே இது முதல் பேய் படம். செமையா என்ஜாய் பண்ணி நடிச்சிருக்காங்க. ஒரு காட்சியில் த்ரிஷா ஆன்னு கத்தனும். தொண்டை கட்டுற அளவுக்கு தொடர்ச்சியா இரண்டு மணி நேரம் கத்தி நடிச்சிருக்காங்க. செம கிளாமராவும் வர்றாங்க”

உங்க படம்னாலே காமெடி ஸ்பெஷல், அதைப் பத்தி சொல்லுங்க..

“முதல்முறையா என் படத்தில் சூரி நடிச்சிருக்கார். டுபாக்கூர் சித்த மருத்துவர் கேரக்டர் அவருக்கு. சூரிக்காக 25 வருஷம் காத்திருக்கிற காதலியாக கோவை சரளா பின்னியிருக்காங்க. சரளாம்மா காமெடி பேய்னே சொல்லலாம். இவரோட அண்ணனா மனோபாலா நடிச்சிருக்கார்.’’

படத்தோட ஹைலட்னா அது எது ?

“ஒரு அம்மன் பாட்டு. இசையமைப்பாளர் ஹிப்பாப் ஆதிக்கு மத்த பாட்டு குத்து பாட்டெல்லாம் வரும். ஆனா படத்தில் ஒரு அம்மன் பாட்டு வேணும்னு சொல்லும்போடு அவரால் அதை பண்ண முடியுமான்னு சந்தேகம் வந்தது. ஆனா பிரமாதமா ஒரு அம்மன் பாட்டு போட்டு கொடுத்தார். அந்தப் பாடலை ஷூட் பண்றது பெரிய சவாலாகவே இருந்தது. 150 அடி உயர அம்மன் சிலை முன்னாடி 350 டான்ஸர், ஆயிரக்கணக்கான துணை நடிகர்கள் நடிச்சாங்க. ஒவ்வொரு ஷாட் எடுக்கும்போதும் நாலு பேருக்காவது நிஜமாகவே சாமி வந்திடும். ரொம்ப மிராக்கிளாக இருந்த அனுபவம் புதுசா இருந்தது. இந்தப் பாட்டு படத்தின் ஹைலட்டா இருக்கும்.

அரண்மனை 2, படம் எல்லாரும் ரசிக்கிற மாதிரியான ஒரு சூப்பரான படமா இருக்கும்,” என்கிறார் இயக்குனர் சுந்தர் .சி.

Read Previous

Trisha ready to work with Sivakarthikeyan

Read Next

Bangalore Naatkal – Official Theatrical Trailer