தமிழில் நீண்ட இடைவெளிக்குப் பிறகு நாகார்ஜுனா நடித்து வெளிவந்த படம், கார்த்தி முதன் முறையாக தெலுங்கில் நேரடியாக நடித்த படம் என ‘தோழா, ஊப்பிரி’ என இரு மொழிகளிலும் வெளிவந்த படம் கடந்த இரண்டு வாரங்களாக வெற்றி நடை போட்டுக் கொண்டிருக்கிறது.
படத்தை வெற்றி பெற வைத்த ரசிகர்களுக்கு நன்றி சொல்லும் விதமாக நேற்று ‘தோழா’ படக் குழுவினர் நன்றி தெரிவித்தனர். நிகழ்வில், நாகார்ஜுனா, கார்த்தி, இயக்குனர் வம்சி உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டனர்.
நிகழ்ச்சியில் பேசிய நாகார்ஜுனா,
“திரைப்படங்கள் வெளிவந்து கமர்ஷியலாக மிகப் பெரிய வெற்றியைப் பெறும். ஆனால், சில படங்கள் மட்டுமே வசூலோடும் ஒரு மரியாதையையும் தேடிக் கொடுக்கும். அப்படி ஒரு படமாக ‘தோழா’ படம் அமைந்தது.
இதைத்தான் இயக்குனர்களும், நடிகர்களும் விரும்புவார்கள். திரையுலகில் 30 வருடங்களுக்கும் மேலாக நடித்துக் கொண்டிருக்கிறேன். சில சமயங்களில் ஆர்வமும், நம்பிக்கையும் குறையும். ஆனால், கார்த்தியுடன் நடித்த பிறகு அது குறைந்துவிட்டது. மீண்டும் என்னுடைய பழைய உத்வேகத்திற்குத் திரும்பி விட்டேன்.
‘தோழா’ படத்தின் வெற்றி எனக்கு மிகப் பெரிய நம்பிக்கையை ஏற்படுத்திவிட்டது. தெலுங்கை விட தமிழிலிருந்துதான் எனக்கு நிறைய பாராட்டுக்கள். என்னுடைய நண்பர்கள் பலரும் படம் பார்த்துவிட்டு, போன் செய்து கொண்டேயிருந்தார்கள். அதே போல் என்னுடைய மனைவி அமலாவின் போனும் ஒலித்துக் கொண்டேயிருந்தது. அவருடைய பழைய தோழிகள் உட்பட பலரும் போன் செய்து என்னிடம் வாழ்த்துகளைத் தெரிவிக்கும்படி கூறிக் கொண்டிருந்தார்கள்,” என மிகவும் மகிழ்ச்சியுடன் நன்றி தெரிவித்துப் பேசினார்.