எல்லோருமே போட்டியாளர்கள் தான் – இசையமைப்பாளர் இஷான் தேவ்

இசையமைப்பாளர் இஷான் தேவ், இவரைப் பற்றி சொல்வதற்கு முன் ஒரு சிறிய அறிமுகம்.

தமிழில் வெளிவந்து மாபெரும் வெற்றி பெற்ற ‘மைனா’ படத்தின் கன்னட ரீமேக்கான ‘ஷைலு’ படத்தில் இடம் பெற்று ‘ஷைலு…’ என்ற சூப்பர் ஹிட் பாடலைப் பாடியவர். அந்தப் பாடலுக்காக சிறந்த பாடகர் என்ற விருதையும் பெற்றவர். தமிழ், மலையாளம், கன்னடம், ஹிந்தியில் சில ஆல்பங்களை உருவாக்கியவர்.

தமிழில் ‘சாரல்’ என்ற படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமாகிறார். தமிழ் சினிமாவுக்கு மேலும் ஒரு திறமையான இசையமைப்பாளர் அறிமுகமாகிறார் என்பது ‘சாரல்’ படத்தின் பாடல்களைக் கேட்கும் போதே தெரிகிறது.

சாரல் திரைப்படத்தில் இடம் பெற்றுள்ள, “என்ன செஞ்ச புள்ள” பாடலும், “கண்ணாலத் தாக்குற” பாடலும் தமிழ் சினிமாவுக்கு இன்னொரு இளமையான மென்மையான திறமையான இசையமைப்பாளர் கிடைத்திருப்பதை உறுதி செய்திருக்கிறது.

சமீபத்தில் இஷான் தேவ்-ன் மியூசிக் ஐடி ஸ்டுடியோவிற்கு வருகை தந்திருந்தார், தமிழ் சினிமாவின் பிரம்மாண்ட தயாரிப்பாளர் தாணு. “அமைதிப்படை பார்ட் 2, கங்காரு”, படங்களின் தயாரிப்பாளரும் ‘திருப்பதி லட்டு’ படத்தின் இயக்குநருமான சுரேஷ் காமாட்சி, தான் இயக்கும் ‘திருப்பதி லட்டு’ படத்தின் பாடல்களைக் கேட்பதற்காக தயாரிப்பாளர் தாணுவை அழைத்திருந்தார்.

‘திருப்பதி லட்டு’ பாடல்களையும் ‘சாரல்’ படத்தின் பாடல்களையும் கேட்டு ரசித்த தயாரிப்பாளர் தாணு, நீண்ட நேரம் இஷான் தேவ் உடன் இசை பற்றி பேசிக்கொண்டிருந்தார். அப்போது இஷான் தேவ்-விடம் உங்களுடைய பாடல்கள் சிறப்பாக இருக்கிறது, மெலடியாக இருக்கிறது. அதே நேரத்தில் பாடல் வரிகள் டிஸ்டர்ப்பே இல்லாமல் தெளிவா கேட்குது, இமானுக்கு போட்டி நீங்க தான்,” எனப் பாராட்டினார்.

இதுபற்றி இஷான் தேவ் கூறுகையில்,

“தாணு சார் ஸ்டுடியோவுக்கு வந்து பாடல்கள் கேட்டு பாராட்டுனது எனக்கு ரொம்ப ரொம்ப சந்தோசமான விஷயம். தாணு சாரோட பாராட்டை என்னோட முதல் பெருமையாக நினைக்கிறேன்.

இப்போது ‘சாரல்’ பாடல்கள், ரொம்ப மெலடியா கேட்க அழகா இருக்குன்னு சொல்லி நிறைய பேர் பாராட்டினாங்க. அது பெரிய சந்தோஷம். அடுத்து வெளியாகப்போற, “பட்டினப்பாக்கம், திருப்பதி லட்டு” படங்கள், சாரல் படத்துக்கு சம்பந்தமில்லாம வேற வேற டைமென்சன்ஸ்ல இருக்கும். கண்டிப்பாக உங்களுக்கு ரொம்ப ரொம்ப பிடிக்கும்.

தமிழ் சினிமாவில் இப்போது நிறைய இளைய இசையமைப்பாளர்கள் இருக்கிறார்கள், எல்லாருமே பிரமாதப்படுத்துறாங்க. யுவன், ஜீ.வி.பிரகாஷ், இமான், அனிருத், சந்தோஷ் நாராயணன், ஷால் ரோல்டன், தரண், நிவாஸ் பிரசன்னா… எல்லாரும் அவங்கவங்க ஸ்டைல்ல பின்றாங்க.

யாருக்கும் தனிப்பட்ட முறையில் நான் போட்டின்னு நெனைக்கல. ஆனா, இன்றைக்கு தமிழில் திறமையான இளைய இசை அமைப்பாளர்கள் இருக்கிறார்கள். அவர்களில் ஒருவனாக இருக்க ஆசைப்படுறேன், அவங்க எல்லாரையுமே எனக்கு போட்டியா நெனைக்கிறேன். என்னோட ஸ்டைல்ல எனக்கு பெஸ்ட்டா அடுத்தடுத்து படங்கள் பண்ணிட்டே இருக்கணும். அதான் என் ஆசை,” என்கிறார் இஷான் தேவ்.

Read Previous

Kabali – Official Teaser – Video

Read Next

‘கபாலி’ டீசரின் அதிரடி சாதனை

Most Popular