‘கபாலி’ படத்தின் தெலுங்கு இசை வெளியீட்டு விழா நேற்று ஹைதராபாத்தில் பிரம்மாண்டமாக நடைபெற்றது.
அப்போது பத்திரிகையாளர்களைச் சந்தித்த படத்தின் இயக்குனர் பா.ரஞ்சித், படத்தில் ரஜினி சார் 20 நிமிடம் மட்டுமே வயதான தோற்றத்தில் வருவார் என்றார். மேலும் படம் பற்றி அவர் அளித்த பேட்டியிலிருந்து சில விஷயங்கள்….
“இந்தக் கதையை வைத்து கொண்டு ரஜினி சாரை நான் அணுகவில்லை. ரஜினி சாரின் மகள் சௌந்தர்யா என்னுடைய தோழி. அவர் ரஜினி சார் என்னைப் பார்க்க விருப்பப்பட்டதாகத் தெரிவித்தார். அவர் நான் இயக்கிய ‘மெட்ராஸ்’ திரைப்படத்தை இரண்டு முறை பார்த்துள்ளார்.
அந்தப் படம் அவருக்கு மிகவும் பிடித்திருந்ததால் அவரை நான் இயக்க வேண்டும் என விருப்பப்பட்டார். அதன் பின்தான் நான் நான் கதையைத் தயார் செய்தேன். பல இயக்குனர்கள் ரஜினி சாருடன் வேலை செய்ய வேண்டும் என்று விருப்பப்பட்டார்கள். ஆனால், அவர் என்னைத் தேர்வு செய்திருந்தார்.
ரஜினி சாரை நான் இயக்கும் வாய்ப்பு கிடைத்ததற்கு மெட்ராஸ் படம்தான் காரணம் இந்தக் கால இளம் இயக்குனர்களுடன் வேலை செய்ய ரஜினி சார் விருப்பப்பட்டார். அதன் மூலம் புதிதாக சில விஷயங்களைக் கொடுக்க முடியும் என அவர் நம்புகிறார்.
பொதுவாக ‘கபாலி’ என்ற பெயர் ரவுடிகளைக் குறிப்பதாக இருக்கிறது. ஆனால், என்னுடைய படத்தில் கபாலி என்ற பெயரை நல்ல விதமாக பயன்படுத்தி இருக்கிறேன்.
மலேசியாவில் இந்தியத் தொழிலாளர்கள் படும் கஷ்டங்களிலிருந்து அவர்களைக் காப்பாற்றுபவராக ரஜினிகாந்த் சாரின் கதாபாத்திரம் இருக்கும். அவர்களின் நலனுக்காக கபாலி எப்படி ‘டான்’ ஆக மாறுகிறார் என்பதுதான் படத்தின் கதை. படத்தில் ரஜினி சார் மலேசிய குடிமகனாக நடித்துள்ளார்.
ரஜினி சார் 20 நிமிடம் மட்டுமே வயதான தோற்றத்தில் வருவார். அந்தத் தோற்றம் படத்திற்கு முக்கியமான ஒரு தோற்றம். படத்தின் மீதிக் காட்சிகளில் ரஜினி சார் இளமையான தோற்றத்தில்தான் நடித்துள்ளார். அதற்காக 1980ம் ஆண்டில் அவருடைய தோற்றம் எப்படி இருந்ததோ அதை அப்படியே கொண்டு வந்துள்ளோம்.
‘முள்ளும் மலரும்’ படத்தில் ரஜினி சாரின் நடிப்பு பெரிதும் பேசப்பட்ட ஒன்று. அதையும் மிஞ்சும் அளவிற்கு ரஜினி சாரின் நடிப்பு கபாலி படத்தில் இருக்கும்.
படத்தில் ஆக்ஷன் என்பது இருக்கிறது. ஆனாலும், படத்தில் எமோஷனலான பல விஷயங்கள் உள்ளன.
‘கபாலி’ படத்திற்கு முன்பாகவே சூர்யாவுடன் பணி புரிய முடிவெடுத்திருந்தேன். அதுதான் என்னுடைய அடுத்த படமாக இருக்கும்,” என்றார் பா.ரஞ்சித்
‘கபாலி’ திரைப்படம் ஜுலை 15ம் தேதியன்று வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.