‘இறைவி’ படம் வந்தால் எங்கேயோ போய்விடுவோம் என்று எதிர்பார்த்த பாபி சிம்ஹாவுக்கு அந்தப் படத்தின் தோல்வி அதிர்ச்சியைக் கொடுத்திருக்கும். அடுத்து வெளிவந்த ‘மெட்ரோ’ படத்திலும் வில்லனாக நடித்திருந்தார்.
அவர் நாயகனாக நடித்த ‘பாம்பு சட்டை’ படம் முடிந்து அப்படியே உள்ளது. அந்த பாம்பு, எப்போது சட்டையைக் கழற்றும் என்று தயாரிப்பாளருக்கே தெரியாத போது, பாபி சிம்ஹாவுக்கு எங்கே தெரியப் போகிறது.
இருந்தாலும் தனது சொந்தத் தயாரிப்பில் வெளிவர உள்ள படம் மூலம் மீண்டும் முன்னே செல்லலாம் என்று பாபி சிம்ஹா முடிவெடுத்துவிட்டார்.
அசால்ட் புரொடக்ஷன்ஸ் சார்பில் அவரே தயாரித்து, கதாநாயகனாக நடிக்கும் ‘வல்லவனுக்கும் வல்லவன்’ படத்தை அறிமுக இயக்குனர் விஜய் தேசிங்கு இயக்கி வருகிறார்.
‘நெடுஞ்சாலை’ புகழ் ஷிவதா மற்றும் பூஜா தேவாரியா நாயகிகளாக நடிக்க, கருணாகரன் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடிக்கிறார்.
இப் படத்தில் பாபி சிம்ஹா 11 கெட்டப்பில் நடித்து வருகிறாராம். அதுமட்டுமின்றி, சுமார் பதினைந்து வருடம் கழித்து சென்னையை அடுத்துள்ள பழவேற்காடு ஏரியில் படமாக்கப்பட்டிருக்கும் தமிழ் படம் ‘வல்லவனுக்கும் வல்லவன்’.
அஜித் குமார் நடித்த ‘சிட்டிசன்’ திரைப்படத்தின் படப்பிடிப்பு தான் இங்கு கடைசியாக படமாக்கப்பட்ட தமிழ் படம் என்பது குறிப்பிடத்தக்கது. அஜித் படத்தின் படப்பிடிப்பு நடந்த இடத்தில் இந்தப் படத்தின் படப்பிடிப்பு நடத்தினால் அஜித் போல புகழ் பெறலாம் என யாராவது அவரிடம் சொல்லியிருப்பார்களோ…?.
அதிரடி திரைப்படமாக உருவெடுத்து வரும் இந்த ‘வல்லவனுக்கும் வல்லவன்’ படத்தின் டீசர், வருகிற ஆகஸ்ட் 2 வெளியாகிறது.