அதிக எதிர்பார்ப்பில் ‘இருமுகன்’, நாளை வெளியீடு

‘அரிமா நம்பி’ படத்தை இயக்கிய ஆனந்த் சங்கர் இயக்கத்தில் விக்ரம், நயன்தாரா, நித்யா மேனன் மற்றும் பலர் நடிப்பில் உருவாகியுள்ள ‘இருமுகன்’ படம் அதிக எதிர்பார்ப்பில் நாளை வெளியாகிறது.

இப்படத்தின் டிரைலர் வெளியான போதே ரசிகர்களிடம் பெரும் ஆர்வத்தைத் தூண்டியது.

படத்தில் விக்ரம் இரண்டு கதாபாத்திரங்களில் நடித்துள்ளார். அதில் இரண்டாவது கதாபாத்திரம் என்ன என்பதை இதுவரை சஸ்பென்சாகவே வைத்துள்ளார்கள். பெண் தன்மை அதிகம் கொண்ட கதாபாத்திரம் என்பது மட்டும் டிரைலரைப் பார்த்த போது தெரிகிறது.

எந்த கதாபாத்திரமாக இருந்தாலும் அதற்காக தன்னுடைய முழு ஒத்துழைப்பை வழங்குபவர் விக்ரம் என்பது அனைவருக்கும் தெரியும்.அது போலத்தான் இந்த ‘இருமுகன்’ படத்திலும் அவர் நடித்திருக்கிறார்.

விக்ரம் ஜோடியாக நயன்தாரா முதன் முறையாக நடிக்கிறார். இரண்டாவது கதாநாயகியாக நித்யா மேனனும் நடிக்கிறார்.

இப்படத்தின் படப்பிடிப்பு வெளிநாடுகளிலும் நடைபெற்றுள்ளது. ஹாரிஸ் ஜெயராஜின் இசையில் பாடல்கள் ஏற்கெனவே ஹிட்டாகியுள்ளன.

ஆரா சினிமாஸ் பிரம்மாண்டமாக வெளியிடும் ‘இருமுகன்’ படம் மிகப் பெரிய வெற்றிப் படமாக அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Read Previous

தனுஷ் இயக்கும் ‘பவர் பாண்டி’

Read Next

Dhanush turned director from today