புதிய திறமைசாலிகளை சரியாக அடையாளம் கண்டு அவர்களை திரையுலகத்திற்கு அறிமுகப்படுத்தி வரும் திருக்குமரன் என்டர்டெயின்மென்ட் சி.வி.குமார் தயாரிப்பில் உருவாகி வரும் படம் ‘அதே கண்கள்’.
இந்தப் படம் மூலம் ரோகின் வெங்கடேசன் இயக்குனராக அறிமுகமாகிறார். இவர் இயக்குனர் விஷ்ணுவர்தனிடம் இணை இயக்குனராகப் பணியாற்றியவர்.
இப்படத்தில் கலையரசன், ஜனனி ஐயர், ஷிவதா நாயர், பால சரவணன் ஆகியோர் நடித்துள்ளனர். மேலும், ‘ஊமை விழிகள்’ படத்தின் இயக்குநரான அரவிந்தராஜ், இந்தப் படத்தில் ஒரு முக்கிய வேடத்தில் நடித்திருக்கிறார்.
சமையல் கலைஞரான கலையரசன் தனியாக ஒரு ரெஸ்டாரென்ட் நடத்தி வருகிறார். பத்திரிகையாளரான ஜனனி ஐயர், கலையரசனின் நீண்ட காலத் தோழி. அவனை மனதார விரும்புகிறார் ஜனனி.
கலையரசனின் பெற்றோரைப் பார்த்து தனது திருமண ஆசையைத் தெரிவிக்கிறார். அதே சமயம் கலையரசன், துணிக் கடை ஒன்றில் வேலை பார்க்கும் ஷிவதாவைச் சந்திக்கிறார். அந்தச் சந்திப்பு வளர்ந்து காதலாக மாறுகிறது.
மூன்று பேருமே தங்களது திருமணக் கனவினை நோக்கி நகரும் வேளையில் நடைபெறும் நிகழ்வுகளும், திருப்பங்களும், அவர்களது வாழ்க்கையை எப்படி புரட்டிப் போடுகின்றன என்பதுதான் படத்தின் கதை.
“படத்தில் ஒரு ஹீரோ, இரண்டு ஹீரோயின்கள் இருந்தாலும் முக்கோணக் காதல்தான் படத்தின் கதை அல்ல. ஆணும், பெண்ணும் எப்படி பழகுகிறார்கள், அவர்களுக்கான புரிதல் எப்படி இருக்கிறது என்பதையும் சொல்லியிருக்கிறோம்.
இந்தக் காலத்து இளைஞர்களின் காதலையும் படத்தில் அப்படியே படம் பிடித்திருக்கிறோம். ஒரு பக்கம் காதல் கதையாக இருந்தாலும் மறுபக்கம் விறுவிறுப்பான த்ரில்லர் ஆகவும் படம் இருக்கும்.
முதலில் கண் பார்வையற்றவராக இருக்கும் நாயகன் கலையரசனுக்கு பின்னர் பார்வை கிடைக்கிறது. அவருக்குப் பார்வை கிடைக்கும் வரை முக்கோணக் காதல் படமாக இருக்கும். ஆனால் அவருக்குக் கண் பார்வை கிடைத்ததும் த்ரில்லர் படமாக மாறிவிடும்,” என்கிறார் இயக்குனர்.
ஜிப்ரான் இசையமைத்துள்ள இந்தப் படத்தின் படப்பிடிப்பு கன்னியாகுமரி, ஈரோடு பகுதிகளில் படப்பிடிப்பு நடத்தப்பட்டுள்ளது.