இசையமைப்பாளரும், நடிகருமான விஜய் ஆண்டனி இசையமைத்து, நாயகனாக நடித்துள்ள ‘சைத்தான்’ படம் இன்று உலகம் முழுவதும் சுமார் 1300 தியேட்டர்களில் வெளியாகியுள்ளது.
தமிழ்நாட்டில் மட்டும் 400 தியேட்டர்களில் வெளியாகியுள்ள இந்தப் படத்தின் சிறப்புக் காட்சி பல திரையரங்குகளில் காலையிலேயே ஆரம்பமாகியுள்ளது.
‘பிச்சைக்காரன்’ படத்திற்குப் பிறகு விஜய் ஆண்டனி நடிப்பில் வெளிவந்துள்ள இந்தப் படத்திற்கு மிகப் பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.
‘பிச்சைக்காரன்’ படம் தெலுங்கிலும் வசூல் சாதனை புரிந்தது. அதோடு, 10 நாட்களுக்கு முன்பு தொலைக்காட்சியில் ஒளிபரப்பான போதும் அதிகமான டிஆர்பி பெற்று புதிய அத்தியாயத்தை உருவாக்கியுள்ளது.
‘சைத்தான்’ படமும் ஒரு வித்தியாசமான கதையம்சத்துடன் உருவாகியுள்ள படம். பிரதீப் கிருஷ்ணமூர்த்தி இயக்கியுள்ள இந்தப் படத்தில் அருந்ததி நாயர் கதாநாயகியாக நடித்துள்ளார்.
சிறப்புக் காட்சிகளில் படத்திற்கு ரசிகர்கள் மிகுந்த வரவேற்பு கொடுத்துள்ளது படக்குழுவினரை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.