எஸ்.எல். பிரபு-வின் எல்.பி.எஸ். பிலிம்ஸ் தயாரிப்பில், சாய் சத்யம் இயக்கத்தில் விஜய் டிவியில் ஒளிபரப்பான ‘கனா காணும் காலங்கள், ஆபீஸ்’ ஆகிய தொடர்களில் நடித்து புகழ் பெற்ற கார்த்திக்ராஜ் பெரிய திரையில் அறிமுகமாகும் படம் ‘465’.
இப்படத்தை இயக்கும் சாய் சத்யம், வேறு எந்த இயக்குனர்களின் உதவியும் இல்லாமல் தனியாக தன்னை ஒரு இயக்குனராக வளர்த்துக் கொண்டவர். அவருடைய சுவாரசியமான திரைக்கதையின் மூலம் “465 (நாலு ஆறு அஞ்சு)” படத்தை அனைவரும் ரசிக்கும்படியாக உருவாக்கியிருக்கிறாராம். நாயகி நிரஞ்சனா ஏற்கனவே தமிழ் மற்றும் மலையாள படங்களில் நடித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
‘ராட்டிணம், கோ 2’ படங்களில் பணியாற்றிய பிலிப் R சுந்தர் இப்படத்திற்கு ஒளிப்பதிவாளராக பணியாற்றியுள்ளார். எ.ஆர்.ரஹ்மானின் இசைக் கல்லூரியில் பயின்ற சஷாங்க் ரவிச்சந்திரன் மற்றும் ஜெஃப் பேட்டர்சன் இப்படத்திற்கு இசையமைத்துள்ளனர்.
“பிச்சைக்காரன், சைத்தான்” படங்களில் எடிட்டராக பணியாற்றிய ஜி.ராஜராஜன் “465 (நாலு ஆறு அஞ்சு)” படத்திற்கு எடிட்டிங் மற்றும் கலரிஸ்ட்டாக பணியாற்றியுள்ளார். மேக் ரியல் மீடியா பாலமுருகன் விஷுவல் எபெக்ட்ஸ் பணிகளை கவனித்துள்ளார்.
“இந்தப் படம் ஒரு சஸ்பென்ஸ் கலந்த திரில்லர் படம். நான் ஒரு டாக்டர், எனது மனைவியாக நிரஞ்சனா நடித்துள்ளார். இந்திய தண்டனைச் சட்டப் பிரிவு 465 என்ன சொல்கிறது என்பதுதான் படத்தின் மையக் கரு. டிவி தொடர்களில் நடித்த போது நல்ல வரவேற்பு இருந்தது. ஆனால், சினிமாவில் அப்படி இல்லை. போராடித்தான் இந்தப் படத்தையே உருவாக்கியுள்ளோம்,” என்கிறார் படத்தின் நாயகன் கார்த்திக்ராஜ்.
விஜய் டிவியிலிருந்து வந்த சிவகார்த்திகேயன், சந்தானம் போன்று கார்த்திக்ராஜுவும் பெரிய திரையிலும் புகழ் பெறும் நாளை ஆவலுடன் எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கிறார்.