முகிலன் சினிமாஸ், தங்கத் துளசி புரொடக்ஷன்ஸ் இணைந்து தயாரிக்கும் படம் ‘சாலை’.
இப்படத்தை ‘நஞ்சுபுரம், அழகு குட்டிச் செல்லம்’ ஆகிய படங்களை இயக்கிய சார்லஸ் கதை, திரைக்கதை, வசனம் மற்றும் பாடல்கள் எழுதி இயக்கியுள்ளார்.
‘எப்படி மனதிற்குள் வந்தாய்’ படத்தின் நாயகன் விஸ்வா ஹீரோவாக நடிக்கிறார். கிரிஷா ஹீரோயினாக அறிமுகமாகிறார். இதற்கு முன்பு ‘அழகு குட்டிச் செல்லம்’ படத்தில் இவர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.’ஆடுகளம்’ நரேன், ஸ்ருதி, அஜித் மணியன், ப்ரீத்தி வர்மா, ஆலன் ஜான் ஆகியோர் முக்கிய கதாபாத்திரமேற்றுள்ளனர். ‘ஆடுகளம்’ நரேன் தவிர பலரும் புதுமுகங்கள்.
சென்னையிலிருந்து காஷ்மீர் சென்ற ஒருவன் பற்றிய திகில் கதைதான் படம். முழுக்க முழுக்க காஷ்மீரில் எடுக்கப்பட்டுள்ளது.
காஷ்மீர் பகுதியில் 45 நாட்கள் பனி கொட்டிக் கிடக்கும் பால் வண்ண நிலப்பகுதியில் படப்பிடிப்பு நடத்தி வந்திருக்கிறது ‘சாலை’ படக் குழு .
படத்தை முகிலன் சினிமாஸ் நிறுவனம் சார்பாக சார்லஷூம், தங்கதுளசி புரொடக்ஷன்ஸ் சார்பாக ரஞ்சித்தும், கிரிஷ்ஷூம் இணைந்து தயாரித்துள்ளனர்.
காஷ்மீரில் படப்பிடிப்பு நடத்திய அனுபவம் பற்றி இயக்குநர் சார்லஸ் கூறுகையில்,
“படத்தின் கதையைப் போலவே படப்பிடிப்பு நடத்திய கதையும் திகில் வரவழைக்கிறது. காஷ்மீர் என்ற பனி பொழியும் வெள்ளை தேசத்துக்கு இந்தப் படத்தில் மிக முக்கியமான பங்கு இருக்கிறது. இந்த படம் காஷ்மீரில் எடுக்க வேண்டிய அவசியம் என்ன என்ற கேள்வி நிச்சயம் வரும். ஒரு சில இயக்குனர்கள் தங்களது படங்களை மீடியம் பட்ஜெட்டில் எடுக்க வேண்டிய கட்டாயம் இருக்கிறது. அதைத் தாண்டி எடுக்கும் வசதியில்லாத போது படத்தில் தரம் எப்படியும் குறந்துவிடும்.
ஆனால் நான் எனக்கு உள்ள அந்த மீடியம் பட்ஜெட்டில் எடுத்தாலும் படத்தின் தரம் குறைந்துவிடக்கூடாது என்பதில் உறுதியாக இருந்தேன். அது ஒரு விஷூவல் ட்ரீட்டாக இருக்கவேண்டும். அதாவது சின்ன பட்ஜெட் படம் போன்ற தோற்றம் வந்துவிடக்கூடாது. ஒரு பெரிய படமாக இருக்கவேண்டும்.
மேலும் ‘சாலை’ படம் ஒரு சைக்கலாஜிக்கல் த்ரில்லர். இதை ஒரு ரோடு மூவி என்றும் கூறலாம். ஒரு பயணம் என்று இதைச் சொன்னாலும், படம் ஒரு தத்துவார்த்தமான முடிவைக் கொண்டது. எந்த விதமான பயணத்தை ஒருவன் தன் வாழ்வில் அமைத்துக்கொள்ளவேண்டும் என்பதையும் படம் சொல்லும்.
இந்தத் திகில் படத்துக்கு பனி படர்ந்த நிலப்பகுதி முக்கிய பின்னணியாக மட்டுமல்ல ஒரு பாத்திரம் போலவே அமையவேண்டும். அதற்காகவே நாங்கள் காஷ்மீர் போவது என்று முடிவு செய்தோம். ஆனால் அதற்குள்ள சிரமங்களையும் எதிர்கொள்ள நேர்ந்தது.
காஷ்மீரில் நிலவும் அசாதாரணமான பதற்றமான சூழலில் அங்கு படப்பிடிப்புக்கு நுழையவே யாரும் நினைக்க மாட்டார்கள். அப்படி இருக்கும் போது நாங்கள் நடத்தி முடித்து வந்திருக்கிறோம்”. ச
காஷ்மீருக்கென்று தனி விமான தளம் கிடையாது. ராணுவத்தின் விமானதளம் தான் காஷ்மீரில் உள்ள ஒரே விமான தளம்.
“அங்கே லடாக் , ஜம்மு, காஷ்மீர் என மூன்று மாவட்டங்கள் அடங்கிய பகுதிகள் சேர்ந்ததுதான் ஜம்மு-காஷ்மீர் மாநிலம் என்று அழைக்கப்படுகிறது. இதில் காஷ்மீர் பள்ளத்தாக்கு பகுதி மிகவும் பதற்றமான பகுதியாகும்.
நாங்கள் அரசின் முறையான அனுமதி பெற்றுத்தான் படப்பிடிப்பு நடத்தினோம். என்றாலும் கத்தியின் மேல் நடப்பது போல் தான் ஒவ்வொரு நாளும் பயமாக பதற்றமாக இருந்தது. அனுமதி கிடைத்து விட்டதே என்று ஊரில் போய் இறங்கினால் ஊர் முழுக்க ஆயுதம் தாங்கிய ராணுவ வீரர்கள் அதுவும் பத்தடிக்கு ஒருவர் சுற்றிலும் துப்பாக்கிகளுடன் நிற்கிறார்கள்.
இப்படி ஆரம்பமே பீதியைக் கிளப்பியது.அது மட்டுமல்ல அந்தப் பகுதியில் எப்போது தீவிரவாதிகள் சார்ந்த பிரச்சினை வெடிக்கும் என்று தெரியாது என்றும் சொன்னார்கள், திகிலில் உறைந்து விட்டோம். இருந்தாலும் படப்பிடிப்புக்கு புறப்பட்டுவிட்டோம். அங்குள்ள மக்கள் உதவி இல்லாமல் எதுவும் செய்யமுடியாது.
பனித் துகள்களைப் போல் அங்கு வறுமையும் பரவிக்கிடக்கிறது. நாங்கள் மக்கள் உதவியுடன் களத்தில் இறங்கினோம். அவர்கள் எங்களுக்கு பெரும் உதவியாக இருந்தார்கள் என்று சொல்வதைவிட நாங்கள் உயிருடன் திரும்பி வர உதவியாக இருந்தார்கள் என்றுதான் சொல்ல வேண்டும்.
நாங்கள் போனது பனியும் குளிரும் உச்சத்தில் இருக்கும் காலம். காஷ்மீரில் நிலப்பகுதியைப் பனி ஒரு போர்வை போல மூடி இருக்கும் காலம். அங்கே குளிர் மைனஸ் 15 டிகிரி 20 டிகிரி என்று இருக்கும். குளிர் பகலிலேயே எலும்பை ஊடுருவிப் பார்க்கும். இரவில் உயிரை உறைய வைக்கும்படி இருக்கும் .
சாலைகளில் பனி பொழிந்து வழுக்கும் நிலையில் இருக்கும். அப்போது பயணம் என்பது பெரும் சவாலாக இருக்கும். ஒரு புறம் அதளபாதாள பள்ளத்தாக்கு இருக்கும். கரணம் தப்பினால் மரணம் தான். சாலை முழுக்க பனி உறைந்து வழி மறித்திருக்கும். அரசு வாகனம் ஒன்று பனியை அகற்றி போக்குவரத்துக்கு வழிசெய்யும்.
சில இடங்களில் நாமே வாகனங்களைத் தள்ள வேண்டும். காஷ்மீரிகளுக்கு இந்தி பேசத்தெரியாது. காஷ்மீரி மொழி மட்டுமே பேசுவார்கள். நாங்கள் வண்டிகளை ‘தள்ளு தள்ளு’ என்று உயிர் பயத்தில் கத்திக் கொண்டே தள்ளியதைப் பார்த்த, உதவிக்கு வந்த உள்ளூர் காஷ்மீரிகள் தமிழில் ‘தள்ளு, தள்ளு வேகமா’ என்று சேர்ந்து கத்திக் கொண்டே தள்ளினர். அவர்கள் எங்களைப் பார்த்து ‘தள்ளு, தள்ளு வேகமா,’ என்று தமிழ் பேசியது எங்களுக்கு அந்த பதற்றத்திலும் வேடிக்கையாக இருந்தது. அது மட்டுமல்ல நாங்கள் காஷ்மீர் மலைப்பாதையில் சிரமப்பட்டு நிறைய காட்சிகள் எடுத்தோம்.
இப்படிப்பட்ட சூழலில் ஒரு நாள் சுழலும் பனிப்புயலில் சிக்கிக் கொண்டு அவதிப்பட்டோம். இரவு தொடங்குவதற்குள் ஹோட்டலுக்கு திரும்பி கம்பளிக்குள் புகுந்துவிடவேண்டும். ஆனால் சாலைகளில் உள்ள பனிப் பொழிவால் ஒரு நாள் நடு இரவுதான் வர முடிந்தது. உயிர் போய் உயிர் வந்த நாள் அது. அங்குள்ள மக்களுக்கு இந்த சூழலை அணுகும் விதம் நன்றாகவே தெரிந்திருப்பதால் லாவகமாக நடந்துகொள்கிறார்கள். ஐந்து மணிக்கெல்லாம் ஆள் நடமாட்டம் குறைந்துவிடுகிறது.
நாலைந்து வாகனங்கள் முழுக்க படக்குழுவினர் நாங்கள் 50 பேர் இருந்தோம் . சற்றே வேகம் காட்டினால்கூட, பாதை சறுக்கும், விழுந்தால் பாதாளம்தான். இப்படி மாலை 3.30 மணிக்கு புறப்பட்ட நாங்கள், இரவு 12.30 மணிக்குத்தான் தங்கியிருந்த இடத்துக்குப் போய்ச் சேர்ந்தோம்.
இரண்டரை மணிநேரத்தில் செல்ல வேண்டிய தூரத்தை ஒன்பதுமணி நேரத்திற்குப் பிறகுதான் அடைய முடிந்தது. அவ்வளவு பயந்து பயந்து போனோம். ஒரு கட்டத்தில் ஊர்ப் போய்ச் சேருவோமா, இங்கேயே சாகப் போகிறோமா என்று கூட நினைத்தோம். அப்படியெல்லாம் சிரமப்பட்டு இந்தப் படத்தை எடுத்தோம்.
காஷ்மீர் பள்ளத்தாக்கில் குல்மார்க், சோனா மார்க், பெஹல்காம் பகுதிகளில் படப்பிடிப்பு நடைபெற்றுள்ளது. இப்படி காஷ்மீரில் இதுவரை யாரும் பார்க்காத இடங்களில் எடுத்திருக்கிறோம். படமே ஒரு காட்சி அனுபவமாக இருக்கும்.
இவ்வளவு போராட்டங்களுடன் 45 நாட்கள் படப்பிடிப்பு நடத்தி வந்திருக்கிறோம். படத்தின் கதையில் 90 சதவிகித காட்சிகள் காஷ்மீரில்தான் நடக்கும். மீதி 15 நாட்கள் படப்பிடிப்பு சென்னையில் நடைபெற்றது. எடுத்ததைப் பார்த்தவர்கள் வியந்து பாராட்டும் போது படப்பிடிப்பு அனுபவம் நம்ப முடியாத கனவு போல இருக்கிறது.
நிச்சயம் ‘சாலை’ நான் எதிர்பார்த்த மாதிரியே பிரம்மாண்டமான படமாக வந்திருக்கிறது. ஒரு விஷுவல் விருந்தாக இருக்கும்” என்கிறார் இயக்குநர் நம்பிக்கையுடன்.
‘சாலை’ படத்துக்கு ஒளிப்பதிவு செய்துள்ளவர் அறிமுக ஒளிப்பதிவாளர் ஜி.பாலமுருகன். இசை – வேத் சங்கர்.
படப்பிடிப்பு முடிந்து, இப்போது தொழில்நுட்பப் பணிகள் நடைபெற்று வருகின்றன.