ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக கடந்த 10 நாட்களுக்கு முன்பாக சென்னையில் நடைபெற்ற விழா ஒன்றில் ரஜினிகாந்த் பேசினார். அதன் பின் மாணவர்கள், இளைஞர்கள் முன்னெடுத்துச் சென்ற போராட்டம் குறித்து அவர் எந்தவிதமான கருத்துக்களையும் தெரிவிக்கவில்லை.
நடிகர் கமல்ஹாசன் மட்டுமே அடிக்கடி போராட்டத்திற்கு ஆதரவாக கருத்துக்களை வெளியிட்டு வந்தார். இன்று காலை முதலே அவர் தொடர்ந்து தன்னுடைய கருத்துக்களைப் பதிவு செய்து வருகிறார்.
முதல்வருடன் பேசியதாகவும், தெரிந்தவர் மூலம் பிரதமரைத் தொடர்பு கொண்டதாகவும் டிவிட்டரில் பதிவு செய்தார்.
அதைத் தொடர்ந்து நடிகர் ரஜினிகாந்த் தன்னுடைய அறிக்கையை சற்று முன் வெளியிட்டுள்ளார். அதில்,
‘இந்திய சரித்திரத்தில் தங்க எழுத்துக்களால் எழுதக் கூடிய ஜல்லிக்கட்டு தடைக்கு எதிராக ஒன்று திரண்ட மாணவ, மாணவியர்களுக்கும், இளைஞர்களுக்கும், தாய்க்குலமும், அனைத்து தமிழ் மக்களும் நடத்திய, இதுவரைக்கும் வரலாறு கண்டறியாத அமைதியான, ஒழுக்கமான ஓர் அறவழிப் போராட்டத்தை நடத்தி உலகிலுள்ள அனைவரின் கவனத்தை ஈர்த்துப் பாராட்டைப் பெற்று வெற்றிமாலை அணியும் இந்த நேரத்தில் இப்போது நடந்து கொண்டிருக்கும் சம்பவங்களை பார்த்து நான் மிகவும் வேதனையடைகிறேன்.
மத்திய, மாநில அரசாங்கத்திலிருந்தும் பெரிய பெரிய நீதியரசர்கள், வழக்கறிஞர்களிடமிருந்தும் நிரந்தர ஜல்லிக்கட்டுக்கு இவ்வளவு உறுதி கூறிய பின்பு அதற்கு கௌரவம் கொடுத்து, அவர்கள் மீது நம்பிக்கை வைத்து அவர்கள் கூறிய நாட்கள் வரைக்கும் அமைதி காப்பதுதான் கண்ணியமான செயலாகும்.
இப்போது சில சமூக விரோத சக்திகள் இவ்வளவு போராடிய உங்கள் உழைப்புக்கும், முயற்சிக்கும் நீங்கள் சம்பாதித்த நற்பெயருக்கும், இவ்வளவு நாட்கள் உங்கள் போராட்டத்துக்கு உறுதுணையாகவும், பாதுகாப்பாகவும் இருந்த காவல்துறையினருக்கும் களங்கம் விளைவிக்கும் வகையில் செயல்படுவதற்கு நீங்கள் இடம் கொடுக்காமல் உடனே அமைதியாக இந்த அறவழிப் போராட்டத்தை முடித்துக் கொள்ளுமாறு நான் தாழ்மையுடனும், பணிவுடனும் வேண்டி கேட்டுக் கொள்கிறேன்,” என தன்னுடைய அறிக்கையில் ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார்.