ஏமாற்றியது யார் ? – இசையமைப்பாளர் அம்ரீஷ் விளக்கம்

ராகவா லாரன்ஸ், சத்யராஜ், நிக்கி கல்ரானி மற்றும் பலர் நடித்துள்ள ‘மொட்ட சிவா கெட்ட சிவா’ படத்தின் டிரைலர் கடந்த வாரம் வெளியானது.

படத்தின் டிரைலர் வெளியானதும், அந்தப் படத்தில் அம்ரீஷ் இசையில் இடம் பெற்றுள்ள “ஹரஹர மகாதேவகி, பஜனை பாப்பா’’ ஆகிய பாடல்களை தான் இயக்க உள்ள ‘தாத்தா காரைத் தொடாதே’ படத்திற்காக நானும், நண்பன் ராபர்ட்டும் எழுதி உருவாக்கியது என சின்னத் திரை நடிகரான டிங்கு, ஃபேஸ்புக்கில் வெளியிட்ட வீடியோ மூலம் குற்றம் சாட்டினார்.

அதற்கு இசையமைப்பாளர் அம்ரீஷ் நேற்று பத்திரிகையாளர்களைச் சந்தித்து டிங்குவுக்கு காட்டமான பதிலை அளித்தார்.

“இந்த பத்திரிகையாளர் சந்திப்பே டிங்குவுக்கு பதிலளிக்கத்தான். நானும் டிங்குவுக்கு இரண்டு மூன்று நாட்கள் அவகாசம் கொடுத்திருந்தேன். ஆனால், அவர் அதன்பின் தன்னுடைய நிலையிலிருந்து மாறவேயில்லை.

இந்தப் பாடல்கள் இரண்டையும் இசையமைத்தது நான், பாடல்களை எழுதியது சொற்கோ. நான் இசையமைப்பாளராக சாதிக்க வேண்டும் என்று காத்திருந்த போது 2015ம் ஆண்டு அவர் என்னை வந்து அணுகினார். ‘தாத்தா காரைத் தொடாதே’ என்ற படத்தை இயக்கப் போவதாகவும் அந்தப் படத்திற்கு என்னை இசையமைக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டார். நான் அதற்கு ஒரு பட்ஜெட் சொன்னேன். அதெல்லாம் தர முடியாது, நட்பு ரீதியாக இசையமைத்துக் கொடுங்கள் என்றார். நானும் சரி என சம்மதித்தேன்.

அது மட்டுமல்ல இரண்டு பாடல்களையும் இசையமைத்துக் கொடுத்தேன். அதில் ஒரு பாடலை படமாக்க வேண்டும் என்றார். நானும் என்னிடம் இருந்து ஐந்தரை லட்ச ரூபாயை அக்ரிமென்ட் போடுவிட்டு ஒன்றரை லட்ச ரூபாய் அட்வான்ஸ் ஆக பணமாகக் கொடுத்தேன். ஆனால், பாடலை படமாக்காமல் ரிகர்சல் மட்டும் பார்த்துவிட்டு வந்தேன் என்று சொன்னார்.

அதன் பின் அந்தப் படத்தை தொடர முடியாமல் நான் இசையமைத்துக் கொடுத்த பாடல எடுத்துக் கொண்டு வேறு ஒரு இசையமைப்பாளரிடம் சென்று போட்டுக் காட்டி, அங்கு வைத்து வேறு ஒரு தயாரிப்பாளரிடம் பத்து லட்ச ரூபாய் முன்பணம் வாங்கினார். எனது உழைப்பில் உருவான பாடலை வேறு ஒரு இசையமைப்பாளரிடம் போட்டுக் காட்டியது எனக்குப் பிடிக்கவில்லை.

இந்தப் பாடலுக்கு இசையமைத்தது யார் ?, எழுதியது யார் ?, என்பதற்கு என்னிடம் எல்லா ஆதாரமும் இருக்கிறது. ‘மொட்ட சிவா கெட்ட சிவா’ படம் என்னுடைய இசையில் வெளிவர உள்ள முதல் படம். இந்தப் படமே பல பிரச்சனைகளைச் சமாளித்து திரைக்கு வர இருக்கிறது. விரைவில் இசை வெளியீடும் நடைபெற உள்ளது,” என்றார்.

பத்திரிகையாளர் சந்திப்பில் ‘மொட்ட சிவா கெட்ட சிவா’ படத்தின் இயக்குனர் சாய்ரமணி, பாடலாசிரியர் சொற்கோ ஆகியோரும் கலந்து கொண்டனர்.

 

Read Previous

Kaatru Veliyidai – Azhagiye Lyric Video

Read Next

முன் பதிவில் திணறும் ‘போகன்’