உண்மைச் சம்பவங்களின் யதார்த்த வடிவம் ‘சத்ரியன்’ – எஸ்.ஆர்.பிரபாகரன்

தங்களது முதல் படத்திலேயே வித்தியாசமான படத்தையும் கொடுத்து, வியக்க வைக்கும் வெற்றியையும் பெற்றவர்கள் ஒரு சிலரே. ‘சுந்தரபாண்டியன்’ படம் மூலம் தன்னுடைய முதல் படத்திலேயே முத்திரை பதித்தவர் இயக்குனர் எஸ்.ஆர்.பிரபாகரன்.

அவரது இயக்கத்தில் மூன்றாவது படமாக உருவாகி வரும் படம் ‘சத்ரியன்’. சத்யஜோதி பிலிம்ஸ் தயாரிப்பில் யுவன்ஷங்கர் ராஜா இசையில் விக்ரம் பிரபு, ‘அச்சம் என்பது மடமையடா’ படத்தில் நாயகியாக நடித்த மஞ்சிமா மோகன் மற்றும் பலர் இந்தப் படத்தில் நடித்துள்ளார்கள்.

‘சத்ரியன்’ படம் உண்மைச் சம்பவங்களின் அடிப்படையில் உருவாக்கப்பட்ட ஒரு படம் என்கிறார் இயக்குனர் எஸ்.ஆர்.பிரபாகரன்.

“சத்ரியன்’ படம் ஒரு கேங்ஸ்டர் கதை. கத்தியால அந்த ஊரையே கட்டி ஆளணும்னு நினைக்கிற ஒருத்தன். அதனால அவன் வாழ்க்கை என்ன ஆனதுங்கறதுதான் இந்தப் படத்தோட கதை.

எல்லாருக்குமே வாழ்க்கையில தான் இருக்கிற துறையில நம்பர் ஒன்னா இருக்கணும்னு நினைப்பாங்க. அப்படித்தான் ரவுடியா இருக்கிறவங்களும் நினைப்பாங்க.

இந்தப் படத்தோட கதை திருச்சியில நடக்கிற கதை. உண்மைச் சம்பவங்கள் சிலவற்றைப் பத்திக் கேள்விப்பட்டு, அவங்களை எல்லாம் நேர்ல போய்ப் பார்த்து பேசி, அந்த விஷயங்களையும் சேர்த்து இந்தக் கதையை உருவாக்கியிருக்கிறேன்.

ரவுடி சம்பந்தப்பட்ட கதைங்கறதால, அவங்களைக் கொண்டாடற படம் கிடையாது. ரவுடியா வரணும்னு நினைச்சவன் வாழ்க்கையில என்ன நடக்குது, அவன் மாறணும்னு நினைக்கும் போது எப்படிலாம் தவிக்கிறான்கறத யதார்த்தமா சொல்லியிருக்கேன்.

‘சுந்தர பாண்டியன்’ படத்துல எப்படி காதல், நட்பு, குடும்பம் எல்லாம் சேர்ந்து இருந்ததோ, அதே மாதிரி ‘சத்ரியன்’ படத்துலயும் இருக்கும். ‘கேங்ஸ்டர்’ படமா இருந்தாலும் படத்துல ரத்தம் தெறிக்கிற காட்சிகள் கிடையாது. குடும்பத்தோட எல்லாரும் வந்து பார்க்கிற படமாத்தான் இருக்கும்,” என்கிறார் இயக்குனர் எஸ்.ஆர்.பிரபாகரன்.

‘சத்ரியன்’ படத்தின் இசை சமீபத்தில் வெளியானது. தற்போது பின்னணி இசைச் சேர்ப்பு வேலைகள் நடந்து கொண்டிருக்கின்றன. விரைவில் பட வெளியீட்டுத் தேதியை அறிவிக்க உள்ளார்கள்.

Read Previous

முன் பதிவில் திணறும் ‘போகன்’

Read Next

Vishal back in Producers’ Council