ராதாகிருஷ்ணன் அணிக்கு ஜி.சேகரன் ஆதரவு

தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர் சங்கத் தேர்தல் வரும் ஏப்ரல் 2ம் தேதி சென்னையில் நடைபெற உள்ளது.

இந்தத் தேர்தலில் ராதாகிருஷ்ணன் தலைமையில் ஒரு அணியும், கேயார் தலைமையில் ஒரு அணியும், விஷால் தலைமையில் ஒரு அணியும் போட்டியிடுகின்றன.

தலைவர் பதவிக்கு போட்டியிட்ட தயாரிப்பாளர் டி. சிவா போட்டியிலிருந்து விலகி ராதாகிருஷ்ணன் தலைமையிலான அணிக்கு ஆதரவு தெரிவித்தார். அவரைத் தொடர்ந்து தலைவர் பதவிக்குப் போட்டியிட்ட தயாரிப்பாளர் கலைப்புலி ஜி. சேகரன் போட்டியிலிருந்து விலகி, நேற்று ராதாகிருஷ்ணன் தலைமையிலான அணிக்கு தன்னுடைய ஆதரவைத் தெரிவித்தார்.

அதைத் தொடர்ந்து நடைபெற்ற ராதாகிருஷ்ணன் அணியின் பத்திரிகையாளர் சந்திப்பில் அவர் தலைமையில் போட்டியிடும் வேட்பாளர்களும், தற்போதைய தலைவர் கலைப்புலி எஸ்.தாணு, செயலாளர் டி. சிவா உள்ளிட்ட பலரும் பேசினார்கள்.

நிகழ்ச்சியில் பேசிய அனைவரும் விஷால் தயாரிப்பாளர் சங்கத் தேர்தலில் போட்டியிடுவதை கடுமையாக விமர்சித்தார்கள். ஒரு நடிகராக இருந்து கொண்டு தயாரிப்பாளர் சங்கத்தில் அவரால் எப்படி 24 மணி நேரமும் செயல்படி முடியும் என்று கேள்வி எழுப்பினார்கள்.

விஷால் நடித்து வெளிவந்த ‘சமர்’ படத்தின் தயாரிப்பாளரை தான் பேசும் போது தொலைபேசியில் தொடர்பு கொண்ட தயாரிப்பாளர் தாணு, ‘சமர்’ படத்தின் கிளைமாக்ஸ படப்பிடிப்பின் போது தயாரிப்பாளர் வருவதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஷுட்டிங்கை கேன்சல் செய்துவிட்டு சென்றது பற்றி விவரித்தார்.

‘சமர்’ படத்தின் தெலுங்கு உரிமையைத் தராத தயாரிப்பாளர் மீது கோபம் கொண்டு விஷால் அப்படி நடந்து கொண்டார். அவர் எப்படி தயாரிப்பாளர்களைக் காப்பாற்றுவார் என தாணு கடுமையாகப் பேசினார்.

அதோடு, நடிகர் சங்கக் கட்டிடத்திற்கு அவசர அவசரமாக மார்ச் 31ம் தேதியன்று அடிக்கல் விழா நாட்டுவது வேண்டுமென்றே செய்யும் செயல் என்று தயாரிப்பாளர்கள் குற்றம் சாட்டினர்.

ஜே.கே.ரித்தீஷ் பேசும் போது, ‘கடந்த வருடம் என்னுடைய பிறந்த நாள் மற்றும் நடிகர் சங்கத் தலைவர் நாசர் பிறந்த நாளான மார்ச் மாதம் 5ம் தேதியே, அடிக்கல் நாட்ட வேண்டும் என்று முடிவு செய்து அன்றே பூஜை செய்து குழி தோண்டி செங்கல்லை புதைத்தோம். யாரை ஏமாற்றுவதற்காக மீண்டும் ஒரு அடிக்கல் நாட்டு விழாவை செய்கிறார்கள் என்று தெரியவில்லை,” என்றார்.

ஏப்ரல் 1ம் தேதி விஷால் மீதான குற்றச்சாட்டுகளுக்கான ஆதாரத்தை வெளியிடப் போவதாகவும் ராதாகிருஷ்ணன் தரப்பினர் கூறினர்.

Read Previous

Vivasaayigal – Support Farmers – Song by Guru Kalyan

Read Next

‘வனமகன்’ – ‘ஜார்ஜ் ஆஃப் த ஜங்கிள்’ காப்பியா ?