உலகத்திலேயே சிறந்த ஒன்று இல்லாதவர்களுக்குக் கொடுப்பது. ஆனாலும், அப்படிக் கொடுக்கும் மனப்பான்மை எத்தனை பேருக்கு வரும்.
தானங்களில் அன்னதானமும், வஸ்திர தானமும், தண்ணீர் தானமும் சிறந்தவை. அன்னதானம், ஒருவருடைய பசியைப் போக்கும், வஸ்திர தானம், ஒருவருடைய மானம் காக்கும், தண்ணீர் தானம், ஒருவருடைய தாகத்தைத் தீர்க்கும்.
ஆனால், அவற்றை எல்லாம் விட சிறந்த தானம் ஒன்றைச் செய்திருக்கிறார் பெண் இயக்குனர் உஷா கிருஷ்ணன். கலையரசன், காளி வெங்கட் மற்றும் பலர் நடித்து வெளிவந்த ‘ராஜா மந்திரி’ படத்தை இயக்கியவர் இவர்.
கேன்சர் நோயாளிகளுக்காக தன்னுடைய முடியை தானமாகச் செய்திருக்கிறார் இவர். இந்தக் காலத்தில் தங்களது முடி மீது அதிக பாசம் கொண்ட பெண்கள் இப்படிப்பட்ட தானங்களைச் செய்வார்களா என்று பலர் யோசிப்பார்கள்.
ஆனால், எதைப் பற்றியும் யோசிக்காமல் இப்படிப்பட்ட பெருமை மிகுந்த தானத்தைச் செய்திருக்கிறார் உஷா கிருஷ்ணன்.
அது பற்றி அவருடைய முகப்புத்தகத்தில் அவர் பதிவிட்டிருப்பதாவது…
ஏன்..? ஏன் திடீர்னு hair donation? திடீர்னுலாம் இல்ல.. நிறைய தடைவை யோசிச்சிருக்கேன். கேன்சர் பேஷண்ட்ஸ்க்கு ஹேர் டொனேட் பண்ண மினிமம் 15இன்ச் இருக்கனும். வளரட்டும்.. யோசிப்போம்னு விட்டுட்டேன். வளர்ந்துடுச்சு.. பாய்கட் பண்ணலாம்னு நெனச்சா இருந்ததே 15 இன்ச் தான்.
என்னை மொட்டைல பாக்க எனக்கே தைரியம் இல்ல… அதனால வேணாம்னு தள்ளிப்போட்டேன். ஆனா திரும்ப திரும்ப தோனிட்டே இருந்துச்சு.. இப்ப இல்லன்னா இனி எப்பதான்னு முடிவெடுத்து, மறு யோசனைக்கு போகாம, யாரு என்ன ரியாக்ஷன் கொடுப்பாங்கனு யோசிக்காம, டோனார் ரூல்ஸ ஒழுங்கா படிச்சிட்டு green trendsல போய் உக்காந்துட்டேன்.
ரூல்ஸ்: 1. குறைஞ்சது 15 இன்ச் இருக்கனும்.
2. பொடுகு, வேற தலைப் பிரச்சனைகள் இருக்கக்கூடாது.
3. பெர்மனண்ட் கலரிங், டையிங், கர்லிங் பண்ணிருக்ககூடாது.
4. போனி டெயில் போட்டு, முனைகள் சமமாக வெட்டப்பட்டு, பகுதி பகுதியாகப் பிரித்து, இறுக்கமாக கட்டவேண்டும். வெட்டி தரையில் விழுந்ததோ, முறையாக அடுக்கப்படாததையோ வைத்து விக் செய்யமுடியாது.
அவ்ளோ தான் மூன்று பகுதியா பிரித்து, கட்டியிருந்த முடியை ஒரு பாலீத்தின் பையில் வைத்து சீல் செய்து, அடையார் கேன்சர் இன்ஸ்டியூட்டின், ஆந்திரா பேங்க் பில்டிங்கின், மூன்றாவது தளத்தில் உள்ள ஹேர் டோனார் பிரிவில் கொடுத்துட்டேன். அம்மாதான் கொஞ்சம் கோபப்பட்டாங்க.. முடி தான.. வளர்ந்துடும்..” என அவர் பதிவிட்டிருக்கிறார்.
உஷா கிருஷ்ணனின் பெருமை மிக்க தானத்திற்கு நம் வணக்கம்…