எஜிஎஸ் என்டர்டெயின்மென்ட் தயாரிப்பில், அட்லீ இயக்கத்தில், ஏஆர் ரகுமான் இசையமைப்பில், விஜய், நயன்தாரா, ஜாக்கி ஷெராப், கதிர், இந்துஜா மற்றும் பலர் நடிக்கும் படம் ‘பிகில்’.
இப்படத்தின் இசை வெளியீடு நாளை மாலை சென்னையில் நடைபெற உள்ளது.
இதனிடையே, படத்தின் வெளியீட்டுத் தேதி பற்றி தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி புதிய அறிவிப்பு ஒன்றை டிவிட்டரில் வெளியிட்டுள்ளார்.
அதில், “யூகங்களின் அடிப்படையில் வெளியீட்டுத் தேதி பற்றி தவறான வதந்திகளை தயவு செய்து பரப்பாதீர்கள். படத்தின் சென்சார் முடிந்த பிறகே அது பற்றி அறிவிப்போம். பாக்ஸ் ஆபிசில் புதிய சாதனை படைக்கும் விதத்தில் சரியான நாளைத்தான் தேர்வு செய்வோம் என்பதை நம்புங்கள்,” என்று பதிவிட்டுள்ளார்.
‘பிகில்’ படம் தீபாவளி தினமான அக்டோபர் 27ம் தேதி வெளியாகும் என்றும், அதற்கு இரண்டு நாட்கள் முன்னதாக அக்டோபர் 25ம் தேதி வெளியாகும் என்றும் சமூக வலைத்தளங்களில் பரவி வந்தது.
தற்போது தயாரிப்பாளர் தரப்பில் விளக்கமளித்துவிட்டதால் அது பற்றி இனி தவறான செய்திகள் வெளிவராது. தயாரிப்பாளர் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கும் வரை ரசிகர்கள் காத்திருக்க வேண்டும்.